உள்ளூர் செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமுடன் உள்ளார்- அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்

Published On 2022-07-15 07:38 GMT   |   Update On 2022-07-15 07:38 GMT
  • தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 3 மாதமாக இல்லை.
  • பூஸ்டர் தடுப்பூசி முறையாக போட்டுக்கொண்டால் பேரிடரில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.

சென்னை:

பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை சென்னை எழும்பூரில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் 4-ம் அலையை எதிர்கொள்ளும் வகையில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டிய நிலை உள்ளது.

அதனால் பூஸ்டர் முன்எச்சரிக்கை தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் இலவசமாக 2950 மையங்களில் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இதுவரையில் தமிழகத்தில் 11 கோடியே 63 லட்சத்து 18 ஆயிரத்து 727 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மத்திய அரசு நல்ல திட்டத்தை அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 3 மாதமாக இல்லை. எனவே பூஸ்டர் தடுப்பூசி முறையாக போட்டுக்கொண்டால் பேரிடரில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம். 3 கோடியே 45 லட்சம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட வேண்டும்.

முதல் மற்றும் இரண்டாம் தவணையை சேர்த்து 4 கோடியே 77 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும்.

இலவச பூஸ்டர் தடுப்பூசி 75 நாட்களுக்குள் போடப்பட வேண்டும் என்பதால் ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் மெகா தடுப்பூசி முகாம் இனி வருங்காலங்களில் நடத்தப்படும்.

வருகிற 24-ந்தேதி 50 ஆயிரம் இடங்களில் மெகா சிறப்பு முகாம் நடத்தப்படும். அதில் 3 தடுப்பூசிகளும் போடப்படும். எல்லா பிரிவினருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும்.

முதல்-அமைச்சர் நன்றாக இருக்கிறார். இன்றோ, நாளையோ வீடு திரும்புகிறார். ஜனாதிபதி தேர்தலில் அவர் ஓட்டு போடுவார்.

குரங்கு அம்மை நோய் கேரளாவில் ஒருவருக்கு வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் தமிழக-கேரள எல்லையில் 13 இடங்களில் தொடர் கண்காணிப்பு நடக்கிறது.

விமான நிலையங்களிலும் அலுவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று உணவு சாப்பிடக்கூடிய இடங்களில் அதிகம் பரவுகிறது. அதனால் ஓட்டல்களில் சமூக இடைவெளியுடன் உணவு அருந்த வலியுறுத்தப்படும்.

முக கவசம் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு அவசியம் அணிய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார், பொது சுகாதார துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் உடனிருந்தனர்.

Tags:    

Similar News