உள்ளூர் செய்திகள்

இரட்டை இலை சின்னத்தை முடக்க வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

Published On 2022-07-07 08:04 GMT   |   Update On 2022-07-07 08:04 GMT
  • வருகிற 11-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பதவியை எப்படியாவது பறித்து விடவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் முயற்சிக்கின்றனர்.
  • அப்போதும் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒருவேளை பிரச்சினை ஏற்பட்டால் அதனால் பொதுமக்களுக்கு தான் பாதிப்பு ஏற்படும்.

சென்னை:

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அ.தி.மு.க. முன்னாள் உறுப்பினரும், ஜெ.ஜெ.கட்சியின் நிறுவனருமான பி.ஏ.ஜோசப் சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கை தொடர்ந்தார்.

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்கு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

வருகிற 11-ந்தேதி பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களின் ஆதரவை திரட்டுவதற்காக மேலும் ரூ.1000 கோடி செலவு செய்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த செய்தியை எடப்பாடி பழனிசாமி தரப்பில் எதிர்க்கவோ, மறுக்கவோ இல்லை.

இவ்வளவு பெரிய தொகை அவர்கள் ஆட்சியில் இருந்தபோது சுருட்டியதாகத்தன் இருக்கும், அதாவது, மக்கள் வரிப்பணத்தை அவர்கள் சுருட்டியுள்ளனர். அது மட்டுமல்ல வருகிற 11-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் பொதுச்செயலாளர் பதவியை எப்படியாவது பறித்து விடவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் முயற்சிக்கின்றனர்.

அப்போதும் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒருவேளை பிரச்சினை ஏற்பட்டால் அதனால் பொதுமக்களுக்கு தான் பாதிப்பு ஏற்படும். அதனால், தேர்தல் ஆணையம் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து, அக்கட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடந்த மாதம் 28-ந்தேதி மனு அனுப்பினேன்.

இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே, என் மனுவை பரிசீலித்து அ.தி.மு.க.,வுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது பத்திரிக்கை செய்தியின் அடிப்படையில் இந்த வழக்கை மனுதாரர் தொடர்ந்து உள்ளதால், வழக்கை தள்ளுபடி செய்கிறோம். மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் வழக்குச் செலவு (அபராதம்) விதிக்கிறோம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News