உள்ளூர் செய்திகள்

பழவேற்காட்டில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் இடத்தை மாற்ற வேண்டும்- 16 மீனவ கிராம மக்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு

Published On 2022-07-05 09:42 GMT   |   Update On 2022-07-05 09:42 GMT
  • அரங்க குப்பம் லைட் ஹவுஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தனர்.
  • 16 கிராம மீனவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கூணங்குப்பத்தில் நடைபெற்றது.

பொன்னேரி:

பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதியை சுற்றி 50-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகள், கட்டுமரங்களில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

பழவேற்காட்டில் பிடிக்கப்படும் மீன், இறால், நண்டு அதிகமாக ஆந்திரா, கர்நாடகா, பெங்களூர், அசாம் மற்றும் தமிழ கத்தின்பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மாவட்ட மீன்வளம் மற்றும் மீன்வளத்துறை சார்பில் பழவேற்காட்டில் சிறிய மீன்பிடி துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான கருத்து கேட்பு கூட்டம் கடந்த மாதம் 16-ந் தேதி பழவேற்காட்டில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

இதில் மீன்வளத்துறை அதிகாரிகள் கூறும்போது, அரங்க குப்பம் லைட் ஹவுஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 16 கிராம மீனவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கூணங்குப்பத்தில் நடைபெற்றது. இதில் அதிகாரிகள் தெரிவித்த இடத்தில் சிறிய துறைமுகம் அமைத்தால் கடல் அரிப்பு ஏற்படும் எனவும் இதனால் பத்துக்கு மேற்பட்ட கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டினர். மேலும் அதிகாரிகள் மீனவர்களிடம் ஆலோசனை கேட்கவில்லை எனவும் தெரிவித்தனர்.

எனவே கூனங்குப்பம் வடக்கு பகுதியில் மீன்பிடி துறைமுகத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று மீனவகிராமமக்கள் தீர்மானம் நிறைவேற்றினர். இதனால் கடல் அரிப்பு ஏற்படாது எந்த கிராமத்திற்கும் பாதிப்பு ஏற்படாது எனவும் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இதுபற்றி அமைச்சர், எம். எல்.ஏ மற்றும் அதிகாரிகளை சந்தித்து தங்களது கோரிக்கையை தெரிவிக்க திட்டமிட்டு உள்ளனர்.

Tags:    

Similar News