தமிழ்நாடு

கரூர் அருகே இன்று காலை மொபட் மீது லாரி மோதி தாத்தா-பேரன் பலி

Published On 2023-05-29 06:28 GMT   |   Update On 2023-05-29 06:50 GMT
  • சாலை விபத்தில் தாத்தா, பேரன் இருவரும் உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
  • அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர்:

தூத்துக்குடி தனியார் ரசாயன நிறுவனத்தில் இருந்து இன்று காலை 8.30 மணி அளவில் டாரஸ் லாரி ஒன்று ஈரோடு மாவட்டம் பள்ளிப்பாளையம் பேப்பர் மில்லுக்கு சுண்ணாம்பு கல் பாரம் ஏற்றிக் கொண்டு வந்தது. அந்த லாரியை கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா வாரமங்கலம் பகுதியை சேர்ந்த பிரபு (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார்.

இந்த லாரி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த பெத்தான்கோட்டை பிரிவு அருகே வந்து கொண்டு இருந்தது. அப்போது அதே திசையில் மொபட்டில் முன்னால் சென்றவர் திடீரென பெத்தான் கோட்டை வலது பகுதியில் திரும்பினார். இதனால் எதிர்பாராத விதமாக குறுக்கே வந்த மொபட் மீது டாரஸ் லாரி மோதியது. இதில் மொபட் சுக்குநூறாக நொறுங்கியது.

இந்த விபத்தில் மொபட்டை ஓட்டி வந்த பெத்தான்கோட்டை பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் (80) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மொபட்டில் பின்னால் அமர்ந்திருந்த அவரது பேரன் கார்த்தி (14) என்பவர் படுகாயம் அடைந்தார்.

உடனடியாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவரை மீட்டு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் தாத்தா, பேரன் இருவரும் உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News