உள்ளூர் செய்திகள்

சாலையோர டிபன் கடையில் திடீர் தீ விபத்து

Published On 2024-01-31 08:35 GMT   |   Update On 2024-01-31 08:35 GMT
  • கடையின் முன்பு கட்டியிருந்த தார்பாயில் பற்றி எரிய தொடங்கியது.
  • போக்குவரத்து மிகுந்த சாலையில் பெரிய அளவில் தீ விபத்து ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளது.

கடையநல்லூர்:

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் 24 மணி நேரமும் போக்கு வரத்து நிறைந்து இருக்கும்.

இப்பகுதியில் சாலையில் ஒருபுறம் சாலையோர கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சல்மான் பாரிஸ் என்பவர் சாலை ஓரத்தில் மாலை நேர டிபன் கடை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு சல்மான் பாரிஸ் வழக்கம்போல் வியாபாரத்தை நடத்தி கொண்டிருந்தார். அப்போது திடீரென சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்து திடீரென தீப்பற்றியது. தொடர்ந்து தீ மளமளவென கடையின் முன்பு கட்டியிருந்த தார்பாயில் பற்றி எரிய தொடங்கியது.

உடனே சாலை ஓரத்தில் உணவருந்தி கொண்டு இருந்தவர்கள், உணவை கீழே போட்டு விட்டு அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரத்தில் தீ பற்றி எரிய தொடங்கியது. இது குறித்து தகவலறிந்த கடையநல்லூர் போலீசார் அந்த பகுதியில் உள்ள போக்குவரத்தை நிறுத்தினர்.

அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். ஆனால் கடையநல்லூர் தீயணைப்புத்துறையில் இருந்த வண்டி அருகில் உள்ள ஊருக்கு பூக்குழி திருவிழாவிற்கு சென்றதால் அதற்கு பதிலாக 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வாசுதேவநல்லூர் தீயணைப்புத்துறை வாகனத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

ஆனால் வாகனம் வருவதற்கு தாமதமானதால் அங்கே இருந்த இளைஞர்கள் முகமது காலித், அக்பர், ஹாஜி உட்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் எதிரே இருந்த ஹார்டுவேர்ஸ் கடையில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து தீயை அணைத்தனர். பொது மக்களும், வாலிபர்களும் துரிதமாக செயல்பட்டதால் கடையநல்லூரில் போக்குவரத்து மிகுந்த சாலையில் பெரிய அளவில் தீ விபத்து ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News