3-வது நாளாக மழை நீடிப்பு: சேலம், தம்மம்பட்டியில் கொட்டிய கனமழை
- மழையை தொடர்ந்து சேலம் மாநகரில் பல பகுதிகளில் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- குறிப்பாக 5 ரோட்டில் இருந்து அண்ணா பூங்கா வரையும், 5 ரோட்டில் இருந்து சாரதா கல்லூரி சாலையில் அஸ்தம்பட்டி வரையிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
சேலம்:
தமிழகம் முழுவதும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டம் முழுவதும் 3-வது நாளாக நேற்று கனமழை பெய்தது.
சேலம் மாநகரில் நேற்று மதியம் 3 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் 2 மணி நேரம் கனமழையாக கொட்டியது. மேலும் நள்ளிரவில் தொடங்கிய மழை இன்று அதிகாலை வரையும் சாரல் மழையாக நீடித்தது.
நேற்று மதியம் சேலம் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, ஜங்சன், கொண்டலாம்பட்டி உள்பட பல பகுதிகளிலும் இடி, மின்னலுடன் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பெரும்பாலான பகுதிகளில் 2-வது நாளாக சாக்கடை நீருடன் மழை நீரும் கலந்து சாலைகளில் ஆறாக ஓடியது.
வழக்கம் போல கிச்சிப்பாளையம் நாராயணன் நகர், கருவாட்டுபாலம், பச்சப்பட்டி, தாதாகாப்பட்டி, நெத்திமேடு, அம்மாப்பேட்டை ஜெயா தியேட்டர் பகுதி, அத்வைத ஆசிரம ரோடு, பெரமனூர் நாராயணபிள்ளை தெரு, 4 ரோடு, 5 ரோடு, உள்பட பல பகுதிகளில் சாலைகளில் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து ஆறாக ஓடியது. இதனால் மாலை நேரங்களில் அலுவலகங்களுக்கு சென்று வீட்டிற்கு திரும்பியவர்கள், பள்ளி, கல்லூரிக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியவர்கள் கடும் அவதி அடைந்தனர்.
இந்த பகுதிகளில் சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீருடன் கலந்து ஓடிய சாக்கடை நீர் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அந்த தண்ணீரை பொதுமக்கள் பாத்திரங்கள் மூலம் எடுத்து அப்புறப்படுத்தினர். மேலும் வீடுகளுக்குள் சாக்கடை நீர் கலந்த தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
மழையை தொடர்ந்து சேலம் மாநகரில் பல பகுதிகளில் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக 5 ரோட்டில் இருந்து அண்ணா பூங்கா வரையும், 5 ரோட்டில் இருந்து சாரதா கல்லூரி சாலையில் அஸ்தம்பட்டி வரையிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இந்த வாகனங்கள் ஊர்ந்த படியே சென்றன. இந்த சாலைகளை கடக்க மணிக்கணக்கில் ஆனதால் வாகன ஓட்டிகள் தவியாய் தவித்தனர்.
இதே போல சேலம் புறநகர் பகுதிகளில் தம்மம்பட்டி, ஆனைமடுவு, சங்ககிரி, கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது. இடி, மின்னலுடன் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியதால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.
ஏற்காட்டில் நேற்று மதியம் 1 மணி நேரம் கனமழை பெய்தது. மழையை தொடர்ந்து அரை மணிநேரம் பனிமூட்டமாக காட்சி அளித்தது. இன்று காலை வெயில் அடித்த படி இருந்தாலும் கடும் குளிர் நிலவி வருகிறது. சுற்றுலா பயணிகள் வராததால் அஙகுள்ள முக்கிய பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக தம்மம்பட்டியில் 92 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் 85.6, ஆனைமடுவு 49, சங்ககிரி 45.20, கெங்கவல்லி 20, ஏற்காடு 17.8, வீரகனூர் 9, ஓமலூர் 7, மேட்டூர் 6.80, எடப்பாடி 5.23, தலைவாசல் 5, கரியகோவில் 3, காடையாம்பட்டி 2.5, ஆத்தூர் 2, பெத்தநாயக்கன் பாளையம் 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 351.13 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.