கூடுவாஞ்சேரி அருகே அ.தி.மு.க. நிர்வாகிக்கு சரமாரி அரிவாள் வெட்டு
- செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர் லட்சுமிநகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார்.
- கூடுவாஞ்சேரி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அக்கம் பக்கத்தில் விசாரித்தனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர் லட்சுமிநகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 40), இவர் வீடுகளுக்கு ஜல்லி, செங்கல் போன்றவற்றை வினியோகம் செய்யும் தொழில் செய்து வந்தார். மேலும் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைத்தலைவராக இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை மொபட்டில் தனது மகனை வீட்டின் அருகே உள்ள பள்ளியில் விட்டுவிட்டு மீண்டும் மொபட்டில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் செந்தில்குமாரை வழிமறித்து வீச்சரிவாளால் சரமாரியாக முகம் உள்பட பல்வேறு இடங்களில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த செந்தில் குமார் சாலையோரம் உள்ள கால்வாயில் விழுந்து மொத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அவரை மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு செந்தில்குமார் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அக்கம் பக்கத்தில் விசாரித்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை அடிப்படையாக வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து முன் விரோதம் காரணமாக அ.திமு.க. நிர்வாகி செந்தில்குமாரை வெட்டினார்களா? அல்லது பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் இந்த சம்பவம் நடைபெற்றதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.