உள்ளூர் செய்திகள்

பாரதிய ஜனதா கட்சியின் முயற்சி பலிக்காது- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி

Published On 2023-03-08 13:11 IST   |   Update On 2023-03-08 15:17:00 IST
  • தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வளர முடியாது என்பதால் அவர்கள் பல்வேறு சதிகளை செய்து தி.மு.க. ஆட்சிக்கு எதிராக செயல்படுகிறார்கள்.
  • ஈரோட்டில் உள்ள சட்டமன்ற அலுவலகம் ரூ.10 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட உள்ளது.

ஈரோடு:

ஈரோட்டில் இன்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

10-ந்தேதி சென்னையில் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்க உள்ளேன். எனக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனது வெற்றிக்கு பாடுபட்ட அமைச்சர்கள், நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஈரோடு கிழக்கு தொகுதி பொதுமக்கள் என்னிடம் நிறைய கோரிக்கைகளை வைத்துள்ளனர். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன். மேலும் கழிவுநீர் பிரச்சனை, சாலை வசதி உட்பட பல்வேறு கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்.

மேலும் கழிவு நீர் பிரச்சனை, போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை வசதி போன்ற கோரிக்கைகளையும் நிறைவேற்ற பாடுபடுவேன்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக சதி நடக்கிறது என்று கூறியுள்ளார். அவர் கூறியது உண்மைதான். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வளர முடியாது என்பதால் அவர்கள் பல்வேறு சதிகளை செய்து தி.மு.க. ஆட்சிக்கு எதிராக செயல்படுகிறார்கள். இல்லாத பிரச்சினைகளை புதிய பிரச்சினைகளாக அவர்கள் எழுப்பி தி.மு.க. ஆட்சிக்கு எதிராக செயல்படுகிறார்கள்.

வட இந்தியர்கள் தமிழ்நாட்டில் தங்கி வேலை செய்வதால் தொழில் நடத்துபவர்களுக்கு பெரும் உதவியாக உள்ளது. தமிழ்நாட்டில் அவர்களுக்கு முழு பாதுகாப்பு உள்ளது. எனவே தமிழக மக்கள் பாரதிய ஜனதாவின் சதியை முறியடிப்பார்கள்.

இதுபோன்ற பொய்யான வதந்திகளை தமிழக மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்களுக்கு எந்த விதமான ஆபத்தும் இல்லை. பாதுகாப்பாக உள்ளனர். அ.தி.மு.க., பாரதிய ஜனதா கட்சிகள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

ஈரோட்டில் மேட்டூர் ரோடு வரை மேம்பாலம் அமைக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுவும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோடு கனி மார்க்கெட்டில் வியாபாரிகள் புதிய வளாகத்தில் வாடகை அதிகமாக உள்ளதாகவும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

அமைச்சர் முத்துசாமியிடம் இது பற்றி கலந்து பேசி முடிவு செய்யப்படும். ஈரோடு கிழக்கு தொகுதியில் ஏராளமான குடியிருப்புகள் பட்டா இல்லாமல் இருப்பதாக கூறினார்கள். எனது வீட்டுக்கு கூட பட்டா இல்லை. எனவே பட்டா இல்லாதவர்களுக்கு விரைவில் பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஈரோட்டில் உள்ள சட்டமன்ற அலுவலகம் ரூ.10 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட உள்ளது. இந்த பணி நிறைவேற்றப்பட்டதும் எம்.எல்.ஏ அலுவலகம் அங்கு செயல்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத்தொடர்ந்து மத்திய அரசின் கியாஸ் விலை உயர்வை கண்டித்து மகிளா காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

Tags:    

Similar News