உள்ளூர் செய்திகள்

கே.வி. குப்பம் அருகே பேனர் கட்டிய தி.மு.க. பிரமுகர் மின்சாரம் தாக்கி பலி

Published On 2022-11-29 04:29 GMT   |   Update On 2022-11-29 04:29 GMT
  • வடுகந்தாங்கல் பஸ் நிறுத்தம் அருகே மார்க்கபந்து டிஜிட்டல் பேனர் கட்டும் பணியில் ஈடுபட்டார்.
  • அந்த வழியாக செல்லும் மின் கம்பியில் பேனரின் பின்பக்கம் பொருத்தப்பட்டிருந்த இரும்புச்சட்டம் உரசியது.

வேலூர்:

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே உள்ள வடுகந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் மார்க்கப்பந்து (வயது 54). இவர் பஞ்சாயத்து தலைவராக இருந்தார். தற்போது தி.மு.க. ஊராட்சி செயலாளராக பதவி வகித்து வந்தார். இவருடைய மனைவி மாலா ஒன்றிய கவுன்சிலராக உள்ளார்.

நேற்று அந்தப் பகுதியில் மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது.

இதற்காக அமைச்சர் துரைமுருகனை வரவேற்று கொடி தோரணங்கள் கட்டினர்.

நேற்று மாலை வடுகந்தாங்கல் பஸ் நிறுத்தம் அருகே மார்க்கபந்து டிஜிட்டல் பேனர் கட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக செல்லும் மின் கம்பியில் பேனரின் பின்பக்கம் பொருத்தப்பட்டிருந்த இரும்புச்சட்டம் உரசியது. அதில் பாய்ந்த மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட மார்கபந்து மயங்கி விழுந்தார். அவருக்கு உதவியாக இருந்த அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் மார்க்கபந்துவை மீட்டு வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மார்க்கபந்து ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

காயமடைந்த கார்த்திகேயன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கே.வி‌.குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மார்க்கபந்துவுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர்.

மின்சாரம் தாக்கி தி.மு.க. பிரமுகர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News