உள்ளூர் செய்திகள்

கோவை மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. மீது தி.மு.க.வினர் புகார்

Published On 2023-07-04 06:08 GMT   |   Update On 2023-07-04 06:08 GMT
  • கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.
  • தெற்கு மாவட்ட பகுதியில் மட்டும் 20 புகார்கள் கொடுக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தெரிவித்தார்.

கோவை:

கோவை காந்திபுரத்தில் வி.கே.கே. மேனன் சாலையில் கடந்த மாதம் 29-ந்தேதி பாரதிய ஜனதா சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், பாரதிய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பற்றி அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக கோவை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. மீது தி.மு.க.வினர் புகார் செய்த வண்ணம் உள்ளனர்.

பொள்ளாச்சி உதவி போலீஸ் சூப்பிரண்டு பிருந்தாவிடம் தி.மு.க. நகர செயலாளர் நவநீத கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களையும், எம்.எல்.ஏ.க்களையும் தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசி எங்கள் கட்சியினரை இழிவுப்படுத்தி உள்ளார். அவரது பேச்சு வன்முறையை தூண்டுவதாகவும், சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிப்பதாகவும் உள்ளது.

அமைதி பூங்காவான தமிழகத்தில் அவருடைய பேச்சு கொந்தளிப்பை ஏற்படுத்தி இருகட்சியினரிடையே வன்மத்தை தூண்டுவதாக உள்ளது. எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இதேபோல கோவை ரேஸ்கோர்ஸ், காந்திபுரம், சாய்பாபா காலனி என மாநகரில் உள்ள 17 போலீஸ் நிலையங்களில் தி.மு.க. பகுதி செயலாளர்கள் தனித்தனியாக புகார் செய்துள்ளனர். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.

இதுதவிர சூலூர் போலீஸ் நிலையத்திலும் தி.மு.க. நிர்வாகிகள் புகார் கொடுத்துள்ளனர். தெற்கு மாவட்ட பகுதியில் மட்டும் 20 புகார்கள் கொடுக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தெரிவித்தார்.

மேலும் வடக்கு மாவட்டத்தில் தொண்டாமுத்தூர் உள்ளிட்ட இடங்களில் 15-க்கும் மேற்பட்ட புகார்கள் மனுக்கள் கொடுக்கப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த அனைத்து புகார்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News