உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல்லில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் கைது

Published On 2024-03-03 14:51 IST   |   Update On 2024-03-03 14:51:00 IST
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
  • அஜய், ஹரிகரன், மாரிமுத்து, சத்தியசீலன் ஆகிய 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் மாலப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே திருவள்ளுவர் சாலையில் வீட்டு உபயோக பொருட்கள் கடை வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில் இவர் கடந்த 14ந் தேதி காலை வழக்கம் போல் கடையை திறக்கச் சென்றார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடைக்குள் சென்று பார்த்த போது நள்ளிரவில் மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை திருடி சென்றது தெரியவந்தது. அதேபோல் மணிக்கூண்டு அருகே செல்போன் கடையில் ரூ.5 ஆயிரம் திருடு போயிருந்தது. இது குறித்து வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் ஏ.எஸ்.பி. சிபின் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜகோபால், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரபாண்டி, ஜார்ஜ் எட்வார்டு போலீசார் ராதாகிருஷ்ணன், முகமது அலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.


இந்த தனிப்படை போலீசார் திருட்டு நடந்த கடைகள், சாலைகளில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதில் கரூர் கல்லுமடையைச் சேர்ந்த அஜய் (வயது 24), ராயனூரைச் சேர்ந்த ஹரிஹரன் (21), வெங்கமேடு பகுதியை சேர்ந்த மாரிமுத்து (21), கோவை சாய்பாபா காலனியைசேர்ந்த சத்தியசீலன் (23) ஆகியோர் 2 கடைகளிலும் திருடியது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் இவர்கள் பழனி ஆயக்குடியில் 2 ஸ்டுடியோக்களில் பூட்டை உடைத்து 3 விலை உயர்ந்த கேமராக்களை திருடி சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் திருடிய பணம், 3 கேமராக்கள், 3 செல்போன்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அஜய், ஹரிகரன், மாரிமுத்து, சத்தியசீலன் ஆகிய 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News