கோவையில் 31-ந்தேதி பந்த்: பா.ஜனதாவுக்கு காங்கிரஸ் கண்டனம்
- கோவை கார் சிலிண்டர் வெடிப்பு குறித்து தமிழக காவல்துறையின் பாரபட்சமற்ற நடவடிக்கையை அனைவரும் பாராட்டுகிறார்கள்.
- அனைத்து நடவடிக்கைகளும் சரியாக எடுக்கிற நேரத்தில் வருகிற 30-ந்தேதி கோவை மாநகரில் கடையடைப்பு நடத்துவதாக அறிவிப்பது சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து அரசியல் ஆதாயம் தேடுகிற முயற்சியாகும்.
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கோவையில் காரில் சிலிண்டர் வெடித்து இளைஞர் ஒருவர் பலியான வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளதை வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், குற்றம் நிகழ்ந்த 24 மணி நேரத்தில் சம்மந்தப்பட்ட 5 பேரை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேசிய புலனாய்வு முகமையைப் பொறுத்தவரை பல்வேறு வழக்குகளில் பாகுபாடு காட்டப்பட்டு விசாரணைகள் நியாயமாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு இருப்பதை எவரும் மறுக்க மாட்டார்கள்.
வழக்கை விரைவாக விசாரித்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க என்.ஐ.ஏ. அமைப்புக்குத் தேவையான காவலர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். நியமிக்கவில்லை என்றால் விசாரணைக்குக் குந்தகம் ஏற்படுகிற நிலை ஏற்படும்.
இந்நிலையில், கோவை கார் சிலிண்டர் வெடிப்பு குறித்து தமிழக காவல்துறையின் பாரபட்சமற்ற நடவடிக்கையை அனைவரும் பாராட்டுகிறார்கள். அனைத்து நடவடிக்கைகளும் சரியாக எடுக்கிற நேரத்தில் வருகிற 31-ந்தேதி கோவை மாநகரில் கடையடைப்பு நடத்துவதாக அறிவிப்பது சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து அரசியல் ஆதாயம் தேடுகிற முயற்சியாகும். பா.ஜ.க.வின் இத்தகைய போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.