உள்ளூர் செய்திகள்

கோவையில் தொற்றை கண்டறிவதில் சிக்கல்- காய்ச்சல் மருந்தால் பரிசோதனையில் இருந்து தப்பும் விமான பயணிகள்

Published On 2022-12-31 04:10 GMT   |   Update On 2022-12-31 04:10 GMT
  • கொரோனா தொற்று பரவல் தொடர்பான தடுப்பு நடவடிக்கைகளில் உடல் வெப்ப பரிசோதனை முக்கியமாக கருதப்படுகிறது.
  • சளி, இருமல் உள்ளிட்ட இதர அறிகுறிகளையும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை:

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் விமான நிலையங்களில் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் பரிசோதனை மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

கோவை விமான நிலையத்திலும் கொரோனா பரிசோதனை மையம் திறக்கப்பட்டு வெளிநாடுகளில் இருந்து வரும் பயனிகளிடம் பரிசோதனை செய்யப்படுகிறது.

தானியங்கி உடல் வெப்ப பரிசோதனை எந்திரம் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் பரிசோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் சிலர் காய்ச்சலுக்கான மருந்துகளை உட்கொண்டு பயணிப்பதாகவும், அவர்கள் விமான நிலைய வளாகத்தில் பரிசோதனையில் இருந்து தப்பி செல்வதையே நோக்கமாக கொண்டு செயல்படுவதாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கொரோனா தொற்று பரவல் தொடர்பான தடுப்பு நடவடிக்கைகளில் உடல் வெப்ப பரிசோதனை முக்கியமாக கருதப்படுகிறது. இதுதவிர சளி, இருமல் உள்ளிட்ட இதர அறிகுறிகளையும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 2 சதவீதத்தினருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

ஒருசில பயணிகள் தங்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் அதை மறைக்க காய்ச்சலுக்கான மருந்துகளை உட்கொண்டு பயணிக்கின்றனர்.

அவர்களின் நோக்கம் பரிசோதனைகளில் இருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்பது தான். ஆனால் வீட்டுக்கு சென்ற உடல்நிலை மேலும் மோசமடைந்து அதற்கு பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதுபோன்று பரிசோதனையில் சிக்காமல் வெளியேறும் நபர்கள் சமுதாயத்தில் நோய் பரவல் ஏற்பட முக்கிய காரணமாக அமைந்து விடுகின்றனர்.

எனவே வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் ஒவ்வொருவரும் தங்களின் பொறுப்பை உணர்ந்து நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News