சவ ஊர்வலத்தில் ஏற்பட்ட முன்விரோதத்தில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
- செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் அண்ணா தெருவை சேர்ந்தவர் ரதி.
- ரதி ஓட்டேரி போலீசில் புகார் செய்தார்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் அண்ணா தெருவை சேர்ந்தவர் ரதி (வயது 45), நேற்று முன்தினம் இவரது உறவினர் ஒருவர் இறந்துவிட்டார். அவரது இறுதி ஊர்வலம் மண்ணிவாக்கம் அண்ணா தெரு வழியாக நடைபெற்ற போது அதே பகுதியை சேர்ந்த ஜீவா என்ற வாலிபர் நடனம் ஆடிக்கொண்டிருந்தார். அப்போது ரதியின் உறவினர் சுஜித், ஜீவாவிடம் நேரமாகிவிட்டது. நடனத்தை நிறுத்தும்படி கூறியுள்ளார். இதனால் ஜீவாவுக்கும் சுஜித்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து ஜீவா வீட்டுக்கு சென்று நடந்த சம்பவத்தை பற்றி ரதி மற்றும் அவரது உறவினர்கள் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஜீவா தனது உறவினர்களுடன் ரதி வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றியது. இதில் ரதியின் உறவினர் சுமதியை ஜீவா அறிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதில் காயம் அடைந்த சுமதி குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ரதி ஓட்டேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணை அரிவாளால் வெட்டிய 3 பேர் கொண்ட கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.