காவிரியில் வெள்ளப்பெருக்கு- நெரிஞ்சிப்பேட்டையில் மீண்டும் படகு போக்குவரத்து, மின் உற்பத்தி நிறுத்தம்
- மேட்டூர் அணை நிரம்பியதையொட்டி அணையில் இருந்து 1 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
- நெரிஞ்சிப்பேட்டையில் கதவணை மின் உற்பத்தி நிலையத்திலும் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
அம்மாபேட்டை:
ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே, நெரிஞ்சிப்பேட்டை படித்துறையில் இருந்து, சேலம் மாவட்டம், பூலாம்பட்டிக்கு படகு போக்குவரத்து இயங்கி வந்தது.
இந்த நிலையில் மேட்டூர் அணை நிரம்பியதையொட்டி அணையில் இருந்து 1 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இதனால் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் வரத்து அதிகமாக வருவதால் நெரிஞ்சிபேட்டை படகு போக்குவரத்தை நிறுத்த வேண்டும்.
மேலும் காவிரி ஆற்றின் கரையோரத்தில் பொதுமக்கள் துணி துவைக்கவோ, குளிக்கவோ வேண்டாம் எனவும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி நெரிஞ்சிபேட்டை- பூலாம்பட்டி இடையேயான படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதனால் இரு மாவட்ட பொதுமக்களும் நெரிஞ்சிப்பேட்டை கதவணை வழியாக இரு சக்கர வாகனங்கள் மூலம் சென்று வருகின்றனர். மேலும் நெரிஞ்சிப்பேட்டையில் கதவணை மின் உற்பத்தி நிலையத்திலும் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பொதுமக்கள் காவிரியில் புனித நீராடி அருகில் உள்ள கோவில்களில் வழிபடுவார்கள். ஆனால் தற்போது காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் குளிக்க கூடாது என பேரூராட்சி மற்றும் வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.