உள்ளூர் செய்திகள் (District)

சிதம்பரம் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து நகைக்கடை உரிமையாளர் மனைவி பலி

Published On 2023-09-11 08:53 GMT   |   Update On 2023-09-11 08:53 GMT
  • சிதம்பரம் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து நகைக்கடை உரிமையாளர் மனைவி பலியானார்.
  • விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் கீழரதவீதி பகுதியை சேர்ந்தவர் மங்கேஷ்குமார். இவரது மனைவி சுபாங்கி (வயது 42). மங்கேஷ்குமார் கீழரத வீதியில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

சுபாங்கியின் தம்பி நாம்தேவ் கடந்த சில நாட்களாக தனது அக்காள் சுபாங்கிக்கு கார் ஓட்டும் பயிற்சி அளித்து வருகிறார். வழக்கம்போல் இன்று காலையில் சுபாங்கிக்கு நாம்தேவ் கார் ஓட்டுவதற்கு பயிற்சி அளித்து வந்தார்.

இந்த கார் சிதம்பரத்தில் இருந்து தெற்கு பிச்சாவரம் சாலையில் சென்றது. அப்போது சுபாங்கி ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையோரத்தில் இருந்த வடிகால் ஆற்றில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கார் ஆற்றில் வேகமாக பாய்ந்ததால் காரில் இருந்த சுபாங்கி, அவரது தம்பி நாம்தேவ் ஆகியோர் செவ்வதறியாது திகைத்தனர். பின்னர் நீரில் கார் மூழ்கியது. காரில் இருந்து தம்பி நாம்தேவ் மட்டும் போராடி வெளியே வந்து விட்டார். ஆனால் சுபாங்கியால் காரை விட்டு வெளியேவர முடியவில்லை. நாம்தேவ் காருக்குள் மாட்டிக்கொண்ட அக்காளை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரால் மீட்க முடியவில்லை. அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்களின் உதவியுடன் நாம்தேவ் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் உடனடியாக தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் மூழ்கிய காரை போராடி மீட்டனர்.

நீரில் மூழ்கி நீண்ட நேரம் ஆனதால் காருக்குள் இறந்த நிலையில் சுபாங்கி கிடந்தார். இதனையடுத்து அண்ணாமலைநகர் போலீசார் காரினுள் இறந்து கிடந்த சுபாங்கி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜா முத்தையா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சுபாங்கிக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News