உள்ளூர் செய்திகள்

பா.ஜ.க.வினர்-போலீசார் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு: மாவட்ட தலைவர் உள்பட 45 பேர் கைது

Published On 2023-11-01 15:19 IST   |   Update On 2023-11-01 15:19:00 IST
  • அனுமதியையும் மீறி பா.ஜ.கவினர் ஒன்று கூடி கொடி கம்பம் நடும் பணியில் ஈடுபட்டனர்.
  • போலீசாருக்கும், பா.ஜ.கவினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பீளமேடு:

சென்னை பனையூரில் உள்ள பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையின் வீட்டின் முன்பு இருந்த பா.ஜ.க கொடிக்கம்பம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அகற்றப்பட்டது.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொடிக்கம்பங்கள் நடப்படும் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அதன்படி பா.ஜ.கவினர் தமிழகம் முழுவதும் கொடிகம்பங்கள் நட்டு பா.ஜ.க கொடியேற்றி வருகிறார்கள்.

அந்த வகையில் கோவை மாவட்டத்திலும் பா.ஜ.க கொடிக்கம்பங்கள் நடப்பட்டு வருகிறது. மாநகர் மாவட்ட பா.ஜ.க சார்பில், கோவை பீளமேடு அருகே மசக்காளி பாளையத்தில் இன்று பா.ஜ.க. கொடியேற்றும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக அந்த பகுதியில் பா.ஜ.க மாநில துணைத்தலைவர் கனகசபாபதி, மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி, உத்தமராமசாமி தலைமையில் ஏராளமான பா.ஜ.கவினர் திரண்டிருந்தனர். அவர்கள் அங்கு கொடிக்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டனர்.

கொடிக்கம்பம் நடுவதற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். ஆனால் அனுமதியையும் மீறி பா.ஜ.கவினர் ஒன்று கூடி கொடி கம்பம் நடும் பணியில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

ஆனால் அவர்கள் செல்ல மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், பா.ஜ.கவினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் அனுமதியின்றி ஒன்று கூடிய பா.ஜ.க மாநில துணைத்தலைவர் கனகசபாபதி, பொதுச்செயலாளர் லட்சுமி கோபிநாத், மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி, துணை செயலாளர் மோகன்ராஜ் உள்பட 45 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை வேனில் ஏற்றி சென்று அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News