ரெயில்வே மேம்பாலம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து வாலிபர் பலி
- பள்ளத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் லோகேஷ் நிலைதடுமாறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
- விபத்து குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் நகர போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆத்தூர்:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சுள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த ராஜி என்பவரின் மகன் லோகேஷ் (வயது 26). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு மதுமிதா என்ற மனைவியும் தர்ஷன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.
இவர் 3 நாட்கள் விடுமுறைக்காக தனது சொந்த ஊரான திருச்செங்கோட்டிற்கு சென்னையில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வந்தார். இந்நிலையில் நேற்று இரவு விடுமுறை முடிந்ததால் இன்று அதிகாலை தனது மோட்டார் சைக்கிளில் திருச்செங்கோட்டில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு உள்ளார்.
ஆத்தூர் அருகே ராசிபுரம்-ஆத்தூர் சாலையில் உள்ள ஹவுசிங் போர்டு ரெயில்வே மேம்ப லம் பணி நடை பெறுகிறது. மேம்பாலம் அமைப்பதற்காக அங்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்த பள்ளத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் லோகேஷ் நிலைதடுமாறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் நகர போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.