உள்ளூர் செய்திகள்

இலவச திருமணத்தை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தாலியை எடுத்து கொடுத்து நடத்தி வைத்தார்.

பொது சிவில் சட்டம் அனைவரையும் இணைக்கும்- அண்ணாமலை

Published On 2023-07-05 07:16 GMT   |   Update On 2023-07-05 07:16 GMT
  • மேகதாது அணை கூடாது என்பதில் தமிழக பாஜக உறுதியாக உள்ளது.
  • 3 மாநில அரசுகளின் அனுமதி இல்லாமல் மேகதாது அணையை கட்ட முடியாது.

விழுப்புரம்:

ஸ்ரீராம் அறக்கட்டளை மற்றும் ஸ்ரீராம் சி.பி.எஸ்.இ. பள்ளி ஓமந்தூர் சார்பில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம்-விழுப்புரம் ஜி.எஸ்.டி. சாலை திண்டிவனம் கோர்ட்டு வளாகத்தின் அருகே உள்ள ஸ்ரீ காஞ்சி மகா பெரியவர் திடலில் இன்று காலை 10.15 மணி முதல் 11.45 மணி வரை தனித்தனியாக 39 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தை தமிழ்நாடு பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலையை ஸ்ரீராம் அறக்கட்டளை நிறுவனரும், பா.ஜ.க. பிரமுகரும், ஓமந்தூர் ஸ்ரீராம் சி.பி.எஸ்.இ. பள்ளி செயலாளருமான ஹரிகிருஷ்ணன் வரவேற்றார். பின்னர் 39 ஜோடி மணமகன்கள் பட்டு வேட்டி, சட்டை அணிந்து, மணமகள்கள் பட்டு புடவையுடன் அலங்கரிக்கப்பட்டு ஒவ்வொரு திருமண ஜோடிகளுக்கு முன்பாக அந்தணர்கள் யாகம் நடத்தி, பிரபல தவில் வித்வான்கள் மற்றும் நாதஸ்வர வித்வான்களின் மங்கல இசையுடன் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் கலந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை ஒவ்வொரு திருமண ஜோடிகளுக்கும் 4 கிராம் தங்க திருமாங்கல்யத்தை எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.

இந்த திருமண ஏற்பாடுகளை ஸ்ரீராம் அறக்கட்டளை நிறுவனரும், பா.ஜ.க. பிரமுகரும், ஓமந்தூர் ஸ்ரீராம் சி.பி.எஸ்.இ. பள்ளி செயலாளருமான ஹரிகிருஷ்ணன் செய்திருந்தார்.

இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மேலும் கூடுதலாக 3 திருமண ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தனர். இங்கு நடந்த திருமணம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது, பொது சிவில் சட்டம் அனைவரையும் இணைப்பதற்காக வரக்கூடிய சட்டம். தண்ணீர் தர முடியாது என கூற கர்நாடக அரசுக்கு அதிகாரம் இல்லை. அரசியல் லாபத்திற்காக தமிழக மக்களை அடமானம் வைப்பதை பாஜக ஒரு போதும் அனுமதிக்காது. மேகதாது அணை கூடாது என்பதில் தமிழக பாஜக உறுதியாக உள்ளது. 3 மாநில அரசுகளின் அனுமதி இல்லாமல் மேகதாது அணையை கட்ட முடியாது. காவிரி நீர் விவகாரத்தில் மத்திய அமைச்சரிடம் தமிழக அரசு வலியுறுத்தினால், தமிழக பாஜக துணை நிற்கும் என கூறினார்.

திருமண நிகழ்ச்சியில் மாநில செயலாளர் சம்பத், பிரச்சார செயலாளர் விநாயக மூர்த்தி, தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், மாவட்ட தலைவர்கள், கலிவரதன், ராஜேந்திரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முரளி என்கின்ற ரகுராமன், புதுச்சேரி எம்.எல்.ஏ. அசோக் பாபு மற்றும் பா.ஜ.க. மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News