உள்ளூர் செய்திகள்
பா.ஜ.க.வின் போராட்டம் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது- அண்ணாமலை
- தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக இன்று அண்ணாமலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார்.
- ஊழலை ஒழிக்க முதல் தலைமுறையினர் பா.ஜ.க உடன் இணைந்து செயல்பட வேண்டும்.
சென்னை:
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தி.மு.க. வினரின் சொத்து பட்டியல்களை வெளியிட்டார். அதில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு பற்றியும் குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பாக டி.ஆர்.பாலு சைதாப்பேட்டை கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இதையடுத்து தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக இன்று தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருக்கு வழக்கின் நகல் வழங்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணையான ஆகஸ்ட் 24-ந்தேதி மீண்டும் ஆஜராகுமாறு அண்ணாமலைக்கு உத்தரவிடப்பட்டது.
இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ஊழலுக்கு எதிரான பா.ஜ.க.வின் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி சென்றுள்ளது. ஊழலை ஒழிக்க முதல் தலைமுறையினர் பா.ஜ.க உடன் இணைந்து செயல்பட வேண்டும் என கூறினார்.