உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை கோஷம்- எடப்பாடி பழனிசாமிக்கு 80 சதவீதம் பேர் ஆதரவு

Published On 2022-06-15 12:32 IST   |   Update On 2022-06-15 14:34:00 IST
  • அ.தி.மு.க. சார்பில் எடுக்கப்படும் முடிவுகள் கடந்த சில மாதங்களாக தாமதமாகின்றன.
  • மேல்சபை தேர்தல் வேட்பாளரை அறிவிப்பதற்கு அ.தி.மு.க.வில் தாமதம் ஏற்பட்டதற்கு இரட்டை தலைமைதான் காரணம்.

சென்னை:

அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 23-ந்தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

அ.தி.மு.க.வில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. அதோடு மேலும் பல முக்கிய முடிவுகளும் இந்த கூட்டத்தில் எடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அ.தி.மு.க.வினருக்கு இந்த கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

செயற்குழு, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து முடிவு செய்வதற்காக நேற்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழகத்தில் நடந்தது. 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை சுமார் 4.30 மணி நேரம் இந்த கூட்டம் நீடித்தது.

பொதுக்குழு கூட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளர்களை அழைக்கலாமா? வேண்டாமா? என்பது பற்றி முதலில் ஆலோசனை நடந்தது. எடப்பாடி பழனிசாமி பேசுகையில், 'புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் குறித்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டியது உள்ளது. எனவே சிறப்பு அழைப்பாளர்களுக்கு இம்முறை அழைப்பு இல்லை' என்று கூறினார்.

இதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளர்களையும் அழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் அது ஏற்கப்பட வில்லை.

இதையடுத்து மூத்த தலைவர்கள் பேச அழைக்கப்பட்டனர். முதலில் பேசிய முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி, 'அ.தி.மு.க. வலுவாக செயல்பட ஒற்றைத் தலைமை வேண்டும்' என்று கூறினார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

என்றாலும், கூட்டத்தில் அடுத்தடுத்து பேசவந்த அனைவரும் ஒற்றைத் தலைமை பற்றியே பேசினார்கள். இதனால் கூட்டத்தில் காரசாரமாக விவாதம் நடந்தது. ஜே.சி.பி. பிரபாகர், மனோஜ் பாண்டியன், வைகை செல்வன் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பேசுகையில், 'ஒற்றைத் தலைமை பற்றி இப்போது பேசவேண்டாம். பொதுக்குழுவை நடத்துவது பற்றி பேசுங்கள்' என்றார். ஆனால் பெரும்பாலான அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் ஒற்றை தலைமைதான் கட்சிக்கு நல்லது என்ற கருத்தை வெளியிட்டனர்.

குறிப்பாக அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், உதயகுமார் போன்றவர்கள் ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்கள்.

ஒற்றைத் தலைமை எதற்காக வேண்டும் என்ற காரணங்களையும் மூத்த தலைவர்கள் விளக்கமாக எடுத்துரைத்தனர். அ.தி.முக.வில் கொள்கை முடிவுகளை உடனுக்குடன் எடுப்பதற்கு ஒற்றைத் தலைமை முறைதான் சரியானதாக இருக்கும் என்று அவர்கள் பேசினார்கள்.

அ.தி.மு.க. சார்பில் எடுக்கப்படும் முடிவுகள் கடந்த சில மாதங்களாக தாமதமாகின்றன. மேல்சபை தேர்தல் வேட்பாளரை அறிவிப்பதற்கு அ.தி.மு.க.வில் தாமதம் ஏற்பட்டதற்கு இரட்டை தலைமைதான் காரணம். ஒற்றைத் தலைமை இருந்தால் உடனுக்குடன் முடிவு எடுக்க முடியும் என்று அ.தி.மு.க. முத்த தலைவர்கள் தெரிவித்தனர்.

முடிவுகள் எடுக்கதாமதம் ஆவதால் வலுவான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. வால் செயல்பட இயலவில்லை என்ற கருத்தையும் மூத்த தலைவர்கள் வெளிப்படுத்தினார்கள். எனவே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்தது போல் ஒற்றைத் தலைமைதான் கட்சிக்கு வலிமை தரும் என்றும் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் வலியுறுத்தினார்கள்.

இதற்கு ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டனர். மனோஜ் பாண்டியன் பேசுகையில், ' கட்சிக்காக ஓ.பன்னீர்செல்வம் நிறைய தியாகம் செய்துள்ளார். தேர்தலின் போது முதல்-மந்திரி வேட்பாளர் பதவியை விட்டுக்கொடுத்தார். தேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விட்டுக் கொடுத்தார். எனவே அவர் தியாகத்துக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்றார்.

ஜே.சி.பி.பிரபாகரன் பேசுகையில், 'தற்போதைய சூழ்நிலையில் ஒற்றைத் தலைமை கொண்டு வந்தால், கட்சிக்கு பேராபத்து ஏற்படும். எனவே இரட்டை தலைமை தொடரவேண்டும்' என்றார்.

கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் மாறி மாறி கருத்துக்களை வெளியிட்டதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பெரும்பாலானவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேசியதால், ஓ.பன்னீர்செல்வம் மவுனமாக பரர்த்துக்கொண்டே இருந்தார்.

அப்போது சூழ்நிலையின் வெப்பத்தை தணிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி எழுந்து, 'ஒற்றைத் தலைமை பற்றி நாங்கள் பேசி முடிவு செய்து கொள்கிறோம்' என்றார். அதன்பிறகுதான் ஆலோசனை கூட்டத்தில் ஆவேசமும், சூடும் குறைந்தது.

பொதுக்குழுவில் பேசி முடிவு செய்துகொள்ளலாம் என்று தீர்மானித்தனர்.

இதற்கிடையே அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியே திரண்டிருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் அ.தி.மு.க. வுக்கு ஒற்றைத் தலைமை தான் வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள். இதன் காரணமாக அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை கோஷம் பிரதான இடத்தை பிடித்துள்ளது.

ஒற்றைத் தலைமைக்கு வரப்போவது எடப்பாடி பழனிசாமியா? அல்லது ஓ.பன்னீர்செல்வமா? என்ற எதிர்பார்ப்பும் அ.தி.மு.க. தொண்டர்களிடம் மட்டுமின்றி மக்கள் மனதிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. கட்சியில் ஏற்படும் சிறு சிறு தகராறுகள் வராமல் இருக்க வேண்டும் என்றால் ஒற்றைத் தலைமைதான் சிறந்தது என்ற கருத்து அ.தி.மு.க.வில் 99 சதவீதம் பேரிடம் நிலவுகிறது.

அவர்களில் 80 முதல் 90 சதவீதம் பேர் வரை எடப்பாடி பழனிசாமிதான் அ.தி.மு.க.வுக்கு தலைமை ஏற்க வேண்டும் என்று விரும்புவது நேற்று நடந்த கூட்டத்தின் மூலம் தெள்ளத் தெளிவாக தெரிய வந்துள்ளது. தற்போது அ.தி.மு.க.வில் பெரும்பாலான முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியின் தலைமையையே விரும்புகிறார்கள்.

இதனால் அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியுள்ளது.

நேற்று பிற்பகல் கூட்டம் முடிந்ததும், பொதுக்குழுவில் மற்றவை பற்றி பேசி முடிவு செய்து கொள்ளலாம் என்று எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் புறப்பட்டு சென்றனர். நேற்று இரவு அவர்கள் இருவரும் தனித்தனியே தங்களது ஆதரவாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார்கள். அவர்களது வீடுகளில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திட்டமிட்டு ஒற்றைத் தலைமை கோஷத்தை எழுப்பிவிட்டதாக ஓ.பன்னீர்செல்வத்திடம் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். ஆனால் அதற்கு ஓ.பன்னீர்செல்வம் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. எனவே 23-ந் தேதி நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க.வில் கடந்த டிசம்பர் மாதம்தான் புதிய நிர்வாகிகள் தேர்வு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வானார்கள். ஆனால் பொதுக்குழுவில் இதற்கு ஒப்புதல் கொடுக்காமல் மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை கொண்டுவர எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

இதை அறிந்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், 'இப்போதைக்கு இரட்டை தலைமை நீடிக்கட்டும். பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது பற்றி பிறகு பார்த்துக் கொள்ளலாம்' என்று கூறி உள்ளனர்.

ஆனால் இதை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஏற்கவில்லை. எனவே அ.தி.மு.க. பொதுக்குழுவில் மீண்டும் பொதுச் செயலாளர் பதவி கொண்டு வந்து அந்த பதவிக்கு எடப்பாடி பழனிசாமியை தெரிவு செய்ய முயற்சிகள் நடந்து வருகிறது.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு தற்போது அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் 10 சதவீதம் பேர் ஆதரவுகூட கிடையாது என்று கூறப்படுகிறது. எனவே மீண்டும் பொதுச்செயலாளர் பதவி கொண்டு வருவதை அவரால் தடுத்து நிறுத்த முடியாது என்கிறார்கள். அவர் அதிருப்தி அடையக்கூடாது என்பதற்காக அவரது மகன் ரவீந்திரநாத்துக்கு அ.தி.மு.க.வில் மிக முக்கிய பதவி கொடுக்க எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அ.தி.மு.க.வில் இத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டு ஒற்றைத் தலைமை நிலை உருவானால் அ.தி.மு.க. முழுமையாக எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இதற்கு அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்வு ஏற்படுமா? என்பது 23-ந் தேதிதான் தெரியும்.

அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழுவில் தனது அதிகாரம் தாழ்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வலியுறுத்தினார்கள். ஆனால் புதிய நிர்வாகிகள் தேர்வுக்கு ஒப்புதல் கொடுக்க வேண்டும் என்பதால், சிறப்பு அழைப்பாளர்கள் இம்முறை அழைக்கப்பட மாட்டார்கள் என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறிவிட்டார்.

எனவே வருகிற 23-ந்தேதி நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழுவில் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்ளமாட்டார்கள். அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சிறப்பு அழைப்பாளர்கள் இல்லாமல் நடைபெற போவது இதுவே முதல் முறையாகும்.

பெரும்பாலான மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பதால் அ.தி.மு.க. அவரது கட்டுப்பாட்டுக்குள் செல்வது தவிர்க்க முடியாதது என்று கூறப்படுகிறது.




Full View


Tags:    

Similar News