நாளை வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு- மதுரையில் அ.தி.மு.க. தொண்டர்கள் குவிந்தனர்
- மாநாட்டில் பங்கேற்பதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று மாலை மதுரை வருகிறார்.
- தொண்டர்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை தடையின்றி உணவுகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மதுரை:
கடந்த 1972-ம் ஆண்டு தமிழக மக்களால் புரட்சித்தலைவர் என்று அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க. இன்று வரை அழியா புகழுடனும், வலுவான தொண்டர்களின் பலத்தோடும் தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கி வருகிறது.
தமிழகத்தில் சுமார் 31 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த இயக்கம் அ.தி.மு.க. மட்டுமே. எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜெயலலிதா அ.தி.மு.க.வை 1½ கோடி தொண்டர்கள் பலத்துடன் வலுவோடும், பொலிவோடும் வெற்றி நடை போட செய்தார். இந்தியாவில் 3-வது பெரிய அரசியல் இயக்கமாக அ.தி.மு.க.வை உருவாக்கி தேசிய அரசியலிலும் ஜெயலலிதா வரலாற்று சாதனை படைத்தார்.
அவரது மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. சுமார் 2 கோடி உறுப்பினர்களுடன் புதிய அரசியல் அத்தியாயத்தை எழுத தயாராகி வருகிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வானதையடுத்து முதல் முறையாக அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டை எடப்பாடி பழனிசாமி மதுரையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கூட்டி உள்ளார்.
அ.தி.மு.க. வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு என்ற தலைப்பில் இந்த மாநாடு மிக பிரமாண்ட முறையில் நடத்தப்படுகிறது. அ.தி.மு.க.வின் பொன்விழா ஆண்டையொட்டி நடத்தப்படும் இந்த மாநாட்டை மிகவும் சிறப்பாக நடத்த அ.தி.மு.க. தலைமை திட்டமிட்டு அதற்கான பணிகளை முழு வீச்சில் செய்து வருகிறார்கள். இதற்காக மதுரை ரிங் ரோடு வலையங்குளம் பகுதியில் சுமார் 65 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 50 நாட்களாக இதற்கான பணிகள் இரவு, பகலாக முழு வீச்சில் நடைபெற்று மேடை மற்றும் பந்தல் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.
மாநாட்டு திடலில் 51 அடி உயர கொடிக்கம்பம், புகைப்பட கண்காட்சி அரங்கு, சமையல் கூடங்கள், உணவு பரிமாறும் கேலரிகள், வாகன நிறுத்துமிடங்கள் என்று சுமார் 300 ஏக்கர் பரப்பில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு அந்தப் பகுதி மின்னலங்காரத்தால் ஜொலித்து வருகிறது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரது பிரமாண்ட கட் அவுட்டுகளும் பார்ப்பவர்களை கவர்ந்து வருகின்றன. வழிநெடுகிலும் கொடி, தோரணங்கள் மற்றும் மின்விளக்கு அலங்காரங்களும் செய்யப்பட்டுள்ளன.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று மாலை மதுரை வருகிறார். அவருக்கு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பளிக்கிறார்கள். இதைத் தொடர்ந்து மாநாட்டு திடல் அருகே ஆலங்குளம் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் எடப்பாடி பழனிசாமி தங்கி ஓய்வெடுக்கிறார்.
நாளை காலை 8 மணி அளவில் அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. முன்னதாக மாநாட்டின் முகப்பு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள 51 அடி உயர கொடிக்கம்பத்தில் அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து எடப்பாடி பழனிசாமி மாநாட்டை தொடங்கி வைக்கிறார். அப்போது ஹெலிகாப்டரில் இருந்து பூக்களை தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கவும், ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் சீருடை அணிந்து அணிவகுப்பு மரியாதை செலுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாநாட்டு மேடையில் கவியரங்கம், பட்டிமன்றம், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், இன்னிசை கச்சேரி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.
இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 10 லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மாநாட்டு பந்தலில் 1.50 லட்சம் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இது தவிர மாநாடு மேடையில் இருபுறங்களிலும் தொண்டர்கள் திரளாக கூடி நின்று மாநாட்டு நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காக தனியாக பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
மாநாட்டு திடலில் நூற்றுக்கும் மேற்பட்ட எல்.இ.டி. திரையில் நிகழ்ச்சிகள் காட்டப்படுகின்றன. எனவே நான்கு புறங்களிலும் இருந்து ண்டர்கள் எவ்வித சிரமமும் இன்றி மாநாட்டு பந்தலுக்கு வந்து சேர பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தொண்டர்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை தடையின்றி உணவுகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
காலை உணவாக இட்லி, பொங்கல், உப்புமா மற்றும் வடை, சட்னி, சாம்பார் வழங்கப்படுகிறது. மதிய உணவாக தயிர் சாதம், தக்காளி சாதம், புளி சாதம், வெஜிடபிள் சாதம் என்று தொண்டர்கள் விரும்புகிற வகையில் உணவு பரிமாற திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் காய்கறி கூட்டுகள், ஊறுகாய் வழங்கப்படுகின்றன. அதனுடன் 300 மில்லி தண்ணீர் பாட்டிலும் வழங்கப்படுகிறது. இதற்கான அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்கள் அனைத்தும் சமையல் நடைபெறும் இடத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளன.
சுமார் 10,000 ஊழியர்கள் சமையல் மற்றும் உணவு பரிமாறும் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். தொண்டர்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு 50-க்கும் மேற்பட்ட இடங்களில் நடமாடும் குடிநீர் லாரிகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொட்டிகள் அமைக்கப்படுகின்றன.
நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சுகாதார வளாகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொண்டர்கள் காலை முதல் மாலை வரை மாநாட்டு நிகழ்ச்சிகளை கண்டு களிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை செந்தில் ராஜலட்சுமி குழுவினரின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி, பாடல்கள், மதுரை முத்துவின் காமெடி பட்டிமன்றம், திரைப்பட இசையமைப்பாளர் தேவாவின் இன்னிசை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. மாலை 5 மணி அளவில் அ.தி.மு.க. மாநாட்டின் முத்தாய்ப்பான 32 தீர்மானம் நிறைவேற்றுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசை பாராட்டியும், தி.மு.க. அரசை விமர்சித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. குறிப்பாக கடந்த 1989 ஆம் ஆண்டு தமிழக சட்டசபையில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா தாக்கப்பட்ட விவகாரம் மற்றும் நீட் தேர்வு உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளும் அ.தி.மு.க. மாநாட்டு தீர்மானத்தில் இடம்பெறுகின்றன.
இது தவிர வருகிற பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வின் தேர்தல் வியூகம், கூட்டணி குறித்தும் தீர்மானத்தில் விளக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மாநாட்டின் தலைமை உரையாற்றுகிறார். அப்போது முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட இருக்கிறார். இரவு 8.30 மணிக்குள் மாநாட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிந்து தொண்டர்கள் ஊர் திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அ.தி.மு.க. மாநாட்டை ஒட்டி மதுரையில் பல்வேறு இடங்களில் ராட்சத பலூன்கள் பறக்க விடப்பட்டு, வரவேற்பு பதாகைகள் கட்டப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் இருந்து அ.தி.மு.க. தொண்டர்கள் மதுரையில் குவிய தொடங்கியுள்ளனர்.
வெளியூர்களில் இருந்து வந்துள்ள கட்சியினர் மதுரையில் உள்ள அனைத்து லாட்ஜூகள் மற்றும் விடுதிகளில் அறை எடுத்து தங்கி உள்ளதால் அனைத்து தங்கும் விடுதிகளும் நிரம்பியுள்ளன.
மேலும் பக்கத்து மாவட்டங்களான சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் பகுதிகளிலும் மதுரையின் புறநகர் பகுதிகளிலும் உள்ள தங்கு விடுதிகளிலும் அவர்கள் தங்கி உள்ளனர். சென்னையில் இருந்து மதுரை வந்துள்ள சிறப்பு ரெயில் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர்கள் இன்று காலை முதலே மாநாட்டுக்காக குவிந்து வருகிறார்கள்.
மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. எழுச்சி மாநாடு தமிழக அரசியலில் புதிய உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அ.தி.மு.க. இயக்கத்திற்கு உறுதியாக ஏற்படுத்தும்.
அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தல், சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற இந்த எழுச்சி மாநாடு முதல் புள்ளியாக, அமைவதுடன், மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் அரசியல் மாநாடாக அமையும் என்று முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தெரிவித்துள்ளனர்.