வாகன நிறுத்தமாக மாறிய சூலூர் போலீஸ் நிலையம்
- குற்ற சம்பவத்துடன் தொடர்புடைய வாகனங்களை நிறுத்துவதற்காக தனி வாகன நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- உள்ளாட்சி நிர்வாகம் சீர்படுத்த வேண்டும் என காவல் நிலையத்திற்கு வருவோர் கோரிக்கை விடுத்தனர்.
சூலூர்,
சூலூர் காவல் நிலைய வளாகத்தில் குற்ற சம்பவத்துடன் தொடர்புடைய வாகனங்களை நிறுத்துவதற்காக தனி வாகன நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் அங்கு எப்போதும் 30 கார்கள், 50 பைக்குகளை பார்க்க முடிகிறது.
சூலூரை சேர்ந்த சிலர் போலீஸ் நிலைய வளாகத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு வெளியூருக்கு சென்று திரும்புகின்றனர். இதனால் காவல் நிலையத்திற்கு வரும் வாகனங்களை நிறுத்த போதிய இடம் இல்லை.
சூலூர் காவல் நிலைய வளாகத்தில் கருமத்தம்பட்டி மகளிர் காவல் நிலையமும் இயங்கி வருகிறது. இங்கு வரும் புகார்தாரர்கள் வாகனங்களை நிறுத்த இடம் தேடி அலைவது வாடிக்கையாக உள்ளது.
போலீஸ் நிலையத்தின் அருகில் ஒன்றிய அலுவலகம், தாசில்தார் அலுவலகம் மற்றும் சப் ரிஜிஸ்டர் அலுவலகம் ஆகியவை உள்ளன. இங்கு வருபவர்கள் வாகனங்களை காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி விட்டு செல்வதால் இடப் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே இதனை உள்ளாட்சி நிர்வாகம் சீர்படுத்த வேண்டும் என காவல் நிலையத்திற்கு வருவோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மேலும் பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்திற்கு வருவோர் காவல் நிலைய வளாகத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு மணிக்கணக்கில் நேரத்தை செலவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.