உள்ளூர் செய்திகள்

கும்மிடிப்பூண்டியில் இருந்து வரும் புறநகர் பயணிகள் 4-வது நாளாக தவிப்பு- தினமும் ரெயில் வருகை தாமதம்

Published On 2023-06-15 13:26 IST   |   Update On 2023-06-15 13:26:00 IST
  • எண்ணூர் முதல் கும்மிடிப்பூண்டி வரை 3 ரெயில் பாதை மட்டுமே இருக்கிறது.
  • எக்ஸ்பிரஸ், சரக்கு ரெயில் வரும்போது மின்சார ரெயிலை நிறுத்தி இயக்குகிறார்கள்.

பொன்னேரி:

சென்னை-கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மின்சார ரெயில் சேவையை சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பணியாற்று பவர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் என கும்மிடிப்பூண்டி, கவரப் பேட்டை, பொன்னேரி, மீஞ்சூர், அத்திப்பட்டு உள்ளிட்ட சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தினமும் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் சென்னை-கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி-சென்னை மார்க்க மின்சார ரெயில்களில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இந்நிலையில் கடந்த 3 நாட்களாக காலை 8 மணி முதல் 9 மணி வரை கும்மிடிப்பூண்டி-சென்னை மார்க்கமாக செல்லும் மின்சார ரெயில் காலையில் தாமதமாக வருவதால் வேலைக்கு செல்வோர், பள்ளி- கல்லூரி மாணவர்கள், மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

நேற்று பொன்னேரி ரெயில் நிலையத்துக்கு காலை 8.15 மணிக்கு வரவேண்டிய மின்சார ரெயில் 8.35 மணிக்கு வந்து சேர்ந்தது. மேலும் ரெயில் வரும் நடைமேடை குறித்தும் சரியான நேரத்தில் அறிவிப்பு வெளியிடாததால் பயணிகள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

இதேபோல் இன்று 4-வது நாளாகவும் மின்சார ரெயில்கள் தாமதமாக வந்தன. இதனால் பொன்னேரி, மீஞ்சூர், திருவொற்றியூர், கொருக்குப் பேட்டை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் காத்திருந்த பயணிகள் தவித்தனர்.

இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:- எக்ஸ்பிரஸ் ரெயில் செல்வதற்காக சரக்கு ரெயில்கள் வரும் போது அதனை புறநகர் ரெயில் பாதையில் மாற்றி மாற்றி நிறுத்துகின்றனர். இதனால் மின்சார ரெயில்கள் இயக்கப்படுவதில் தாமதம் ஏற்படுகிறது. மேலும் காலையில் வட மாநிலங்களில் இருந்து வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் செல்வதற்காக மீஞ்சூர், எண்ணூர் பகுதிகளில் புறநகர் ரெயிலை நிறுத்தி விடுகின்றனர். சென்னை சென்டரலில் இருந்து எண்ணூர் வரை 4 ரெயில் பாதை உள்ளது. எண்ணூர் முதல் கும்மிடிப்பூண்டி வரை 3 ரெயில் பாதை மட்டுமே இருக்கிறது. இதனால் எக்ஸ்பிரஸ், சரக்கு ரெயில் வரும்போது மின்சார ரெயிலை நிறுத்தி இயக்குகிறார்கள்.

மின்சார ரெயில்களில் வருபவர்கள் விரைந்து செல்வதற்காக ஏராளமானோர் விம்கோ நகரில் மெட்ரோ ரெயில்களுக்கு மாறி செல்லும் நிலை உள்ளது. எனவே எண்ணூர்- கும்மிடிப்பூண்டி இடையே 4-வது ரெயில் பாதை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பித்ரகுண்டா ரெயில் கவரப்பட்டை அருகே என்ஜின் கோளாறால் நிறுத்தப்பட்டதால் புறநகர் மின்சார ரெயில் சேவை சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News