உள்ளூர் செய்திகள்

பாவூர்சத்திரத்தில் போதிய அரசு பஸ்கள் இல்லாததால் மாணவர்கள் அவதி

Published On 2023-07-22 08:49 GMT   |   Update On 2023-07-22 08:49 GMT
  • பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக பல மணி நேரம் மாணவர்கள் காத்து கிடக்கின்றனர்.
  • பயணிகள் பயன்படுத்தி வந்த கழிப்பிடமும் தற்பொழுது பூட்டப்பட்டு கிடக்கிறது.

தென்காசி:

பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் நெல்லை, ஆலங்குளம், சுரண்டை, மேட்டூர், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் பள்ளி, கல்லூரிகளில் அதிகம் பயின்று வருகின்றனர்.

பஸ்வசதி

அதில் பல பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தனியாக பஸ் வசதிகள் இல்லாததால் அரசு பஸ்களை நம்பியே தங்களின் படிப்பை தொடர்கின்றனர். பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் காலையிலேயே வரும் மாணவர்கள் பஸ்சுக்காக பல மணி நேரம் காத்து கிடக்கின்றனர். நீண்ட நேரத்திற்கு பின்பு வரும் பஸ்களில் மொத்தமாக மாணவர்கள் ஏறுவதால் பஸ்சின் படிக்கட்டில் தொங்கி ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் நிலையே தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் பெரும் விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது.

எனவே மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதல் அரசு பஸ்களை பாவூர்சத்திரத்தில் இருந்து இயக்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பாவூர்சத்திரம் பஸ் நிலையத்திற்குள் இலவசமாக பயணிகள் பயன்படுத்தி வந்த கழிப்பிடமும் தற்பொழுது பூட்டப்பட்டு கிடக்கிறது. குடிநீர் வசதியும் இல்லாததால் பெரிதும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் சார்பில் பலமுறை சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் மற்றும் யூனியன் நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். தென்காசி மாவட்ட கலெக்டர் பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் உள்ள பழுதடைந்த நிலையில் பூட்டப்பட்டுள்ள இலவச கழிப்பிடத்தையும், இயங்காமல் உள்ள குடிநீர் பைப்பையும் உடனடியாக சரி செய்திட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டுமென பள்ளி கல்லூரி மாணவர்கள் சார்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News