உள்ளூர் செய்திகள்

பஸ் படிக்கட்டுகளில் தொங்கி செல்லும் மாணவர்களை கண்காணித்து அறிவுறுத்தும் போலீசார்.

பஸ்சில் தொங்கி செல்லும் மாணவர்கள்; அறிவுறுத்தி அனுப்பி வைத்த போலீசார்

Published On 2022-09-27 09:56 GMT   |   Update On 2022-09-27 09:56 GMT
  • 19 நகர பஸ்களும் சில தனியார் பஸ்களும் மட்டுமே கிராம பகுதிக்கு இயக்கப்பட்டு வருகிறது.
  • தொங்கி கொண்டு மாணவர்கள் செல்வதை பார்த்து போலீசார் பஸ்சை நிறுத்தி மாணவர்களை உள்ளே செல்ல எச்சரித்தனர்.

சீர்காழி :

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட 79 வருவாய் கிராமங்களும் 100-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களும் அமைந்துள்ளது.

இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மாணவ- மாணவிகள் வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம் என அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்கும் சீர்காழி நகர் பகுதியில் சார்ந்து உள்ளனர்.

இத்தனை கிராமங்களில் இருந்து நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் நகர் பகுதிக்கு பயணித்து வரும் நிலையில் சீர்காழி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து 19 நகர பஸ்களும் சில தனியார் பஸ்களும் மட்டுமே கிராம பகுதிக்கு இயக்கப்பட்டு வருகிறது.

இதனால் பள்ளி நேரங்களில் மாணவர்கள் படிக்கட்டுக்களில் தொங்கி கொண்டு செல்லும் நிலை தொடர்கிறது.

இந்நிலையில் சீர்காழி டி.எஸ்.பி. (பொ) ஜெயபாலன், இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் புதியபேருந்து நிலையம் பகுதியில் பள்ளி நேரங்களில் பயணம் செய்யும் மாணவர்களை கண்காணித்தனர்.

அப்போது நகர பஸ்களில் தொங்கி கொண்டு மாணவர்கள் செல்வதை பார்த்து போலீசார் பஸ்சை நிறுத்தி மாணவர்களை உள்ளே செல்ல எச்சரித்தனர்.

இடம் இல்லாமல் தொங்கி கொண்டு செல்லும் மாணவர்களை அந்த பஸ்சில் இருந்து இறக்கிவிட்டு அடுத்து வரும் பஸ்களில் செல்ல அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News