காரைக்காலில் தந்தையை தாக்கிய மகன் கைது
- கருத்து வேறுபாடு காரணமாக, மனைவி மற்றும் மகன் மயிலாடுதுறையில் தனியாக வசித்து வருகின்றனர்.
- தனது பெயரில் மட்டும் தனி கணக்கை சாமிநாத தொடங்கி உள்ளார்.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே நிரவி அக்கரை வட்டம் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் சாமிநாதன்(வயது 60). கூலித் தொழிலாளி. அவரது மனைவி ஞான ஒளி, மகன் நவீன். கடந்த சிலநாட்களுக்கு முன்பு கணவன், மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மனைவி மற்றும் மகன் மயிலாடுதுறையில் தனியாக வசித்து வருகின்றனர். ஆனால் ரேசன் கார்டை மாற்றாத காரணத்தால், அரசு வழங்கும் சலுகை மற்றும் பணம் தந்தைக்கு சென்று சேர்வதால், தந்தையின் வங்கி கணக்கில் நவீன் தன்னை ஜாயின் அக்கவுண்டராக அண்மையில் சேர்த்து ள்ளார்.
ரேஷன் கார்டில் அரசு வழங்கும் பணத்தை சாமிநாதன் எடுக்கும் பொழுதெல்லாம், அவரது மனைவி ஞான ஒளியின் செல்போனுக்கு குறுந்தகவல் சென்றுள்ளது. இதனை அறிந்த மகன் நவீன், ரேசன் கார்டில் வரும் பணத்தை ஞான ஒளிக்கு வழங்குமாறு அவ்வப்போது கூறி வந்தார். ஆத்திரமடைந்த சாமிநாதன், வங்கி பாஸ்புக் தொலைந்து விட்டதாக கூறி, தனது பெயரில் மட்டும் தனி கணக்கை சாமிநாத தொடங்கி உள்ளார். இது குறித்து விபரம் மனைவி ஞான ஒளியின் செல்போனுக்கு குறுந்தகவல் சென்றுள்ளது.
இது குறித்து தந்தையிடம் விவரம் கேட்க நவீன் நிரவிக்கு சென்று தந்தை சாமிநாதனிடம் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், அருகில் இருந்த மரக்கட்டையை எடுத்து தந்தையின் தலையில் பலமாக அடித்து விட்டு நவீன் தப்பி ஓடிவிட்டார். சாமிநாதனின் உறவினர் அரவிந்த், சாமிநாதனை காப்பாற்றி காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்து வமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து அரவிந்த் நிரவி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து நவீனை கைது செய்தனர்.