உள்ளூர் செய்திகள்

இலங்கை தமிழர்கள் வசிக்கும் குடியிருப்பினை கலெக்டர் மதுசூதன் ரெட்டி நேரில் பார்வையிட்டு அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இலங்கை தமிழர் வீடுகளில் கலெக்டர் ஆய்வு

Published On 2022-07-07 14:57 IST   |   Update On 2022-07-07 14:57:00 IST
  • இலங்கை தமிழர் வீடுகளில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
  • இப்பணிகள் நிறைவு பெற்றவுடன் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளன.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மூங்கில் ஊரணியில் உள்ள இலங்கை தமிழர்கள் வசிக்கும் குடியிருப்பினை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மூங்கில் ஊரணியில் இலங்கை வாழ் தமிழர்களுக்கு குடியிருப்புகள் ஏற்படுத்தித்தரும் 1990-ம் ஆண்டு அவசரத்தேவைகளை கருத்தில் கொண்டு தலா 100 சதுரஅடி பரப்பளவில 240 வீடுகள் கட்டப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது 183 குடும்பங்களைச் சேர்ந்த 588 பேர் வசித்து வருகின்றனர். தமிழக அரசின் சார்பில் முகாம் வாழ் தமிழர்களின் அடிப்படை மேம்பாட்டிற்காக குடும்பத்தலைவருக்கு ரூ.1,500-ம், 18 வயது நிரம்பிய உறுப்பினர்களுக்கு ரூ.1,000மும் மற்றும் குடிமைப்பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது.

முகாம் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கின்ற மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு தற்போது பொது சுகாதார வளாகம், தண்ணீர் வசதியுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கழிவுநீர் வடிகால் வசதி செய்யப்பட்டு வருகிறது.

தற்போதைய சூழ்நிலையில் பழைய வீடுகள் பயன்படுத்த ஏதுவாக இல்லாத வீடுகள் கண்டறியப்பட்டு புதிய வீடுகள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் வீடுகள் கட்டுவதற்கான இடம் தேர்வு மற்றும் வரைபடம் தயாரிக்கும் பணி துறை அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் நிறைவு பெற்றவுடன் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது மானாமதுரை வட்டாட்சியர் சாந்தி, முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கான தனி வட்டாட்சியர்உமா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சனிதேவி, சங்கரபரமேஸ்வரி, உதவிப்பொறியாளர்கள் தமிழரசி, தேவிசங்கர் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News