உள்ளூர் செய்திகள்

மாணவரின் பெற்றோரை கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மின்சாரம் தாக்கி பலியான மாணவர் குடும்பத்துக்கு கலெக்டர் ஆறுதல்

Published On 2022-07-29 14:32 IST   |   Update On 2022-07-29 14:32:00 IST
  • மானாமதுரை அருகே மின்சாரம் தாக்கி பலியான மாணவர் குடும்பத்துக்கு கலெக்டர் ஆறுதல் கூறினார்.
  • மற்றொரு மாணவருக்கு தொடர்ந்து சிகிச்சை நடந்து வருகிறது.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள சீனிமடை கிராமத்தை சேர்ந்த மருது பாண்டி என்பவர் மகன் மனோஜ் (வயது 13).இவர் கொம்புகாரனேந்தல் பகுதியில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு படித்து வந்தார்.இதே பள்ளியில் மிளகனூர் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பரது மகன் விக்னேஸ்வரன் (15) பிளஸ்-1 படித்து வந்தார் .

நேற்று மனோஜ், விக்னேஸ்வரன் உள்பட சில மாணவர்கள் பள்ளி மதிய உணவு இடைவேளை நேரத்தில் பள்ளிக்கு வெளியே சென்று ஒரு நாவல் மரத்தில் ஏறி பழம் பறித்தனர் .

இந்த மரத்தை தொட்டு மின் கம்பி சென்றது. இதை கவனிக்காத மனோஜ், விக்னேஸ்வரன் நாவல் பழங்களை பறித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மரத்தின் ஒரு கிளை முறிந்து மின் கம்பி மீது விழுந்தது.

அப்போது மனோஜ், விக்னேஷ்வரன் மீது மின்கம்பி விழுந்து மின்சாரம் பாய்ந்தது.இதில் தூக்கி வீசப்பட்ட மனோஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விக்னேஸ்வரன் படுகாயம் அடைந்தார்.

இதனை கண்ட பொது மக்கள் விக்னேஸ்வரனை மீட்டு மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் சிவகங்கை கலெக்டர் மதுசூதன ரெட்டி மற்றும் டி.எஸ்.பி. கண்ணன் ஆசிரியர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மானாமதுரை யூனியன் தலைவர் லதா,ஒன்றிய தி.மு.க. செயலாளர் அண்ணாதுரை, வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், தாசில்தார் சாந்தி ஆகியோர் மின்சாரம் தாக்கி பலியான மாணவர் மனோஜ் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினர்.

மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் பலியான சம்பவம் மானாமதுரை பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Tags:    

Similar News