உள்ளூர் செய்திகள்

மேற்கு மாம்பலத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு: தண்ணீருக்கு மாதம் 10 ஆயிரம் செலவழிப்பதாக வேதனை

Published On 2024-03-17 09:45 GMT   |   Update On 2024-03-17 09:45 GMT
  • சில பகுதிகளில் ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
  • குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் பகுதிகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீரை கட்டணமில்லாமல் வழங்க வேண்டும்.

சென்னை:

சென்னை மேற்குமாம்பலம் பகுதியில் கோடை காலம் தொடங்கும் முன்பே கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் டேங்கர் லாரி குடிநீரையே நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. டேங்கர் லாரிகளில் குடிநீரை பெறுதற்காக பொதுமக்கள் மாதம் ரூ.10 ஆயிரம் வரை செலவழிக்க வேண்டிய அவலநிலை இருப்பதாக வேதனைப்படுகின்றனர்.

மேற்கு மாம்பலம் விவேகானந்தபுரம் 1-வது தெரு, பாலகிருஷ்ண முதலி தெரு, பாலகிருஷ்ண நாயக்கர் தெரு, சீனிவாச பிள்ளை தெரு, சீனிவாச அய்யங்கார் தெரு, வேலு தெரு, கணபதி தெரு ஆகிய பகுதிகளில் உள்ள பல வீடுகளுக்கு சென்னை குடிநீர் வாரியம் சார்பில் போதிய குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி கடந்த ஒரு மாதமாக வறண்டு கிடப்பதால், அந்த பகுதி மக்கள் தண்ணீர் லாரிகளையே நம்பியுள்ளனர்.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

தி.நகர் மற்றும் மேற்கு மாம்பலம் பகுதிகளுக்கு தினமும் சுமார் 17 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்குகிறோம். சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்காக 150 மில்லியன் லிட்டர் குடிநீரை நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலை, செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் வீராணம் ஏரியை சுற்றியுள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து பெறுகிறோம்.

கடந்த ஜனவரி மாதத்தில், தி.நகர் மற்றும் மேற்கு மாம்பலத்திற்கு குடிநீர் வினியோகம் செய்யும் ஆற்காடு சாலையில் உள்ள குடிநீர் குழாய் மெட்ரோ ரெயில் பணியின் போது சேதமடைந்தது. அந்த குடிநீர் குழாய் சரி செய்யப்பட்டு, குடிநீர் பிரச்சினையை சரி செய்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'சென்னை குடிநீர் வாரியம், சேதம் அடைந்த குழாய்களை சரி செய்தாலும், தண்ணீரின் அழுத்தம் மற்றும் அளவு ஆகியவை கணிசமாக குறைந்துள்ளது. 50 ஆண்டுகள் பழமையான குடிநீர் குழாயை பெரியதாக மாற்றுமாறு சென்னை குடிநீர் வாரியத்துக்கு கடிதம் எழுதினோம். வெறும் 35 வீடுகள் இருந்த இடத்தில், இப்போது கிட்டத்தட்ட 200 வீடுகள் உள்ளன. இதனால் தண்ணீர் போதவில்லை.

சில பகுதிகளில் ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த பகுதி மக்கள் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை சரியாக செலுத்துவதால், குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் பகுதிகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் குடிநீரை கட்டணமில்லாமல் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News