கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உயர்கல்வி உறுதித்திட்டம், புதுமை பெண் திட்டம் மூலம் மாணவியர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை வழங்கப்படுவது குறித்து மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் கல்லூரி நிர்வாகிகள், வங்கி மேலாளர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
நிலுவையில் உள்ள மனுக்களுக்கு சிறப்பு முகாம் மூலம் தீர்வு-கிருஷ்ணகிரி கலெக்டர் தகவல்
- 34 விண்ணப்பங்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகள் என மொத்தம் 674 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது
- கல்வி உதவித்தொகை மாணவியர்களின் வங்கி கணக்கில் செலுதத நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம் - புதுமைப் பெண் திட்டம் மூலம் மாணவியர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை வழங்கப்படுவது குறித்து மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமையில் கல்லூரி நிர்வாகிகள் மற்றும் வங்கி மேலாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
தமிழ்நாடு அரசின் முன்னோக்கு திட்டமான மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் & புதுமைப் பெண் திட்டம் தமிழக முதல்வரால் முதற்கட்டமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந் தேதியன்றும், இரண்டாம் கட்டமாக கடந்த 8-ந் தேதியன்றும் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் கல்லூரிகளில் மொத்தமாக 4,152 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. அதில் 3,023 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 388 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், 741 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது. அதில் பள்ளிகளில் 52 விண்ணப்பங்களும், வங்கியில் 668 விண்ணப்பங்களும், பள்ளி மற்றும் வங்கியில் 21 விண்ணப்பங்களும் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளன.
வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்படாமல் 379 விண்ணப்பங்கள் இந்தியன் வங்கியிலும், 162 விண்ணப்பங்கள் பாரத ஸ்டேட் வங்கியிலும், 99 விண்ணப்பங்கள் கனரா வங்கியிலும், 34 விண்ணப்பங்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகள் என மொத்தம் 674 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது. மேலும், 15 விண்ணப்பங்கள் வங்கி குறிக்கப்படாமலும் உள்ளது.
எனவே, வங்கியாளர்கள் கல்லூரிகளில் சிறப்பு முகாம்கள் அமைத்து நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு, கல்வி உதவித்தொகை மாணவியர்களின் வங்கி கணக்கில் செலுதத நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இந்த கூட்டத்தில், இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர் மகேந்திரன், மின் ஆளுமை மாவட்ட மேலாளர் மற்றும் வங்கி மேலாளர்கள், கல்லூரி நிர்வாகிகள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.