சேலம் போலீசில் ஒப்படைக்கப்பட்ட நகை கடை மேலாளர் உள்பட 14 பேரிடம் விசாரணை
- பழைய நகைகளை வாங்கி விட்டு புதிய நகைகளாக தருவது, நகை சீட்டு சேமிப்பு திட்டங்கள், முதலீட்டுக்கு கூடுதல் வட்டி உள்பட பல்வேறு கவர்ச்சி திட்டங்களை அறிவித்தனர்.
- இதனை நம்பி ஏராளமான பொதுமக்கள் நகை கடைகளில் பணத்தை ெசலுத்தி நகை சீட்டு போட்டு வந்தனர்.
சேலம்:
சேலம் சீலநாயக்கன்பட்டி, அம்மாப்பேட்ைட, தாரமங்கலம், ஆத்தூர், மற்றும் தருமபுரி, திருச்சி, கரூர், கோவை ஆகிய மாவட்டங்களில் எஸ்.வி.எஸ். என்ற பெயரில் 11 நகைக்கடைகள் செயல்பட்டு வந்தது.
பொங்கும் தங்கம் திட்டம்
இந்த கடைகளில் பொங்கும் தங்கம் பழசுக்கு புதுசு, என்ற திட்டத்தின் கீழ் பழைய நகைகளை வாங்கி விட்டு புதிய நகைகளாக தருவது, நகை சீட்டு சேமிப்பு திட்டங்கள், முதலீட்டுக்கு கூடுதல் வட்டி உள்பட பல்வேறு கவர்ச்சி திட்டங்களை அறிவித்தனர்.
இதனை நம்பி ஏராளமான பொதுமக்கள் நகை கடைகளில் பணத்தை ெசலுத்தி நகை சீட்டு போட்டு வந்தனர். மேலும் பழைய நகைகளையும் ஒப்படைத்தனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பல கோடிகளை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.
தப்பி ஓட்டம்
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கடை உரிமையாளரான சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள சுக்கம்பட்டியை சேர்ந்த சபரிசங்கர் (40 )மற்றும் மேலாளர்கள் சம்பந்தப்பட்ட கடைகளை பூட்டி விட்டு பல கோடி நகை பணத்துடன் தப்பி ஓடி தலைமறைவாகினர். இதனால் பணம் செலுத்தி ஏமாந்த மக்கள் கடைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதுடன் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
6 பிரிவில் வழக்கு
அதன் பேரில் மாவட்ட மற்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி நகைக்கடை உரிமையாளர் சபரி சங்கர், மேலாளர் முருகன், ஏஜெண்ட் பிரகாஷ் ஆகியோர் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு அவர்களை தேடி வருகிறார்கள். தொடர்ந்து நகைக்கடை மோசடி குறித்து அந்தந்த மாவட்டங்களில் புகார்கள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் எஸ்.வி,எஸ். நகைக்கடைகளில் கலெக்சன் ஏஜெண்ட், மார்க்கெட்டிங்கில் பணி புரிந்த ஊழியர்களும் பணம் செலுத்தி ஏமாந்த பொது மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் நகைக்கடை முக்கிய நிர்வாகிகள் 14 பேரை பிடித்து வந்து அங்கிருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவர்கள் 14 பேரில் சிலர் கடைகளில் இருந்த எங்களது பணம், நகைகளை எடுத்து சென்று பதுக்கி வைத்துள்ளனர். அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தினால் நகைக்கடை உரிமையாளரை பிடித்து விடலாம், அவரிடம் இருந்து எங்களது பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினர்.
விடுவிப்பு
இதையடுத்து 14 பேரையும் அழைத்து சென்ற டவுன் போலீசார் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்பந்தப்பட்ட நகை கடைகளில் இருந்து பணம் , நகைகள் எடுத்தீர்களா? என்பது குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களிடம் முகவரியை எழுதி வாங்கி விட்டு அழைக்கும் போது விசாரணைக்கு வரவேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தனர். இதனால் அந்த 14 பேரையும் பிடித்து ஒப்படைத்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.