உள்ளூர் செய்திகள்

குடியிருப்பு பகுதியில் கால்வாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஜலகண்டாபுரம் பெரிய ஏரி கிணறு பகுதியில் திரண்ட விவசாயிகள்.

குடியிருப்பு பகுதியில் கால்வாய்அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

Published On 2023-09-06 07:12 GMT   |   Update On 2023-09-06 07:12 GMT
  • உபரிநீர் வெளியேறி வீணாக கடலில் கலப்பதை தடுத்து விவசாயத்திற்கு பயன்படும் வகையில் மேட்டூர் அணை உபரிநீர் திட்டம் 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
  • இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தி கால்வாய் அமைத்தும், ஒரு சில இடங்களில் குழாய் அமைத்தும் நீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர்:

மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் வெளியேறி வீணாக கடலில் கலப்பதை தடுத்து விவசாயத்திற்கு பயன்படும் வகையில் மேட்டூர் அணை உபரிநீர் திட்டம் 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம் மேட்டூர், ஓமலூர், எடப்பாடி உள்ளிட்ட தாலுகாவை சேர்ந்த சுமார் 100 ஏரிகளுக்கு குழாய்கள் மூலம் தண்ணீர் எடுத்துச் சென்று நிரப்புவதற்கு திட்டம் வகுக்கப்பட்டது.

வறண்ட வடிநில ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் விதமாக திப்பம்பட்டி நீர் தேக்க பகுதியில் பிரதான நீரேற்றம் நிலையம் செயல்பட்டு வருகிறது.

இதேபோல் மேட்டூர் -சரபங்கா காவிரி உபரி நீரேற்று திட்டம் நங்கவள்ளி, ஜலகண்டாபுரம், குப்பம்பட்டி, சூரப்பள்ளி, எடப்பாடி வழியாக செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தி கால்வாய் அமைத்தும், ஒரு சில இடங்களில் குழாய் அமைத்தும் நீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தற்போது நங்கவள்ளி, மல்லப்பனூர் பகுதியில் பொக்லைன் எந்திரத்தை பயன்படுத்தி ராட்சத குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்கு அடுத்து ஜலகண்டாபுரம், சூரப்பள்ளி, குப்பம்பட்டி பகுதியில் இப்பணிகள் நடைபெற உள்ளது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து ஜலகண்டாபுரம் பெரிய ஏரி கிணறு பகுதியில் திரண்டனர்.

குடியிருப்பு பகுதியில் கால்வாய் அமைக்காமல் ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதிகளில் கால்வாய் அமைத்து பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் செயல்படுத்த வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் ெபாதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News