பேட்டை நேருஜி நினைவு நகரில் சாலையை சீரமைக்க வேண்டும்-மேயரிடம் பொதுமக்கள் மனு
- நேருஜி நினைவு நகர் பகுதியில் பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.
- புறம்போக்கு நிலத்தில் அரசு அதிகாரி ஒருவர் மாட்டுதொழுவத்தை கட்டியுள்ளார்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் சரவணன் தலைமையில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
மாநகராட்சி துணை கமிஷனர் தாணு மூர்த்தி, செயற்பொறியாளர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது, பேட்டை 18-வது வார்டுக்கு உட்பட்ட நேருஜி நகர் பொதுமக்கள் திரண்டு வந்து அளித்த மனுவில், நேருஜி நினைவு நகர் பகுதியில் பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும், அந்த பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்களும் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சேதுமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நெல்லை மாநகர செயலாளர் துரைப் பாண்டியன் தலைமை யில் நிர்வாகிகள் அளித்த மனு வில் கூறியிருப்ப தாவது:-
மேலப்பாளையம் மண்டலம், வார்டு 46-க்கு உட்பட்ட மேலநத்தம் டாக்டர் அம்பேத்கர் காலனி முப்புடாதி அம்மன் கோவிலின் கீழ் பக்கத்தில் உள்ள இடமானது மக்கள் பயன்பாட்டிற்கும், சிறுவர் விளையாடும் இடமாகவும் இருந்தது.
தற்போது அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் அரசு அதிகாரி ஒருவர் ஆக்கிரமித்து மாட்டுதொழுவத்தை கட்டியுள்ளார். இந்த நிலத்தை மீட்க கோரி ஏற்கனவே பலமுறை புகார் மனு அளித்துள்ளேன். உடனடியாக புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ள மாட்டு தொழுவத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை அப்புறப்படுத்தி அப்பகுதியில் வசிக்கும் மக்களை நோயிலிருந்து காப்பாற்றிட வழிவகை செய்திட வேண்டும். அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.