உள்ளூர் செய்திகள்

நாமக்கல் பலபட்டறை மாரியம்மன் கோவில் நிலத்தை அளவீடு செய்ய கோரிக்கை

Published On 2023-04-05 13:21 IST   |   Update On 2023-04-05 13:21:00 IST
  • பலபட்டறை மாரியம்மன் கோவில் பக்தர்கள் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங்கை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
  • சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றபோது வடக்குப்புறத்தில் இருந்த காலி நிலத்தில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு கும்பாபிசேக விழா நடைபெற்றது.

நாமக்கல்:

நாமக்கல் பலபட்டறை மாரியம்மன் கோவில் பக்தர்கள் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங்கை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மெயின் ரோட்டில் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு அனைத்து சமூகத்தினரும் வழிபடுகின்றனர். சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில், ஒவ்வொரு ஆண்டு மே மாதத்தில் தொடங்கி ஜூலை மாதம் வரை 3 மாதங்கள் விமரிசையாக தேர்த்திருவிழா நடைபெறுவது சிறப்பு ஆகும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றபோது வடக்குப்புறத்தில் இருந்த காலி நிலத்தில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு கும்பாபிசேக விழா நடைபெற்றது. பின்னர் தனி நபர் ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததன் பேரில், அந்த சுவர் ஆக்கிரமிப்பில் உள்ளதால் அதை அகற்ற வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

இதையொட்டி அரசு அதிகாரிகள் முன்னிலையில் கோவிலின் வடக்குப்புற சுவர் கடந்த ஜனவரி மாதம் 24-ந் தேதி இடிக்கப்பட்டது. தற்போது சிறப்பு வாய்ந்த கோயிலின் ஒரு பகுதி சுவர் இல்லாமல், திரையிட்டு மூடப்பட்டு உள்ளதால், பக்தர்கள் மிகவும் மன வருத்தத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், மாவட்ட நிர்வாகம், இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து, நாமக்கல் பலபட்டறை மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் எவ்வளவு என்பதை, பழைய ஆவணங்களின்படி கணக்கிட்டு, அளவீடு செய்து கொடுக்க வேண்டும். அப்போது தான் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு வசதியாக இருக்கும் எதிர்காலத்தில் ஆக்கிரமிப்பு என்ற பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News