உள்ளூர் செய்திகள்

உப்பு உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்ட போது எடுத்த படம்.


ஆறுமுகநேரி அருகே வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றுவதால் நூற்றுக்கணக்கான உப்பளங்கள் பாதிப்பு - தடுத்து நிறுத்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் மனு

Published On 2023-02-07 09:02 GMT   |   Update On 2023-02-07 09:02 GMT
  • கடம்பா குளத்திலிருந்து திருச்செந்தூர் வரையிலான 13 குளங்களுக்கு தண்ணீர் சென்று விவசாயம் நடக்கிறது.
  • தமிழக அரசின் நீர்ப்பாசன துறை சார்பில் உபரிநீர் செல்லும் வாய்க்கால் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.34 கோடி ஒதுக்கப்பட்டது.

ஆறுமுகநேரி:

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணி ஆற்றின் அணைக்கட்டு உள்ளது.இதன் தென்கால் மூலம் தென்திருப்பேரை அருகில் உள்ள கடம்பாகுளம் நிரம்புகிறது.

கடலில் சிறியது கடம்பா' என்று சொல்லும் அளவிற்கு மிகப்பெரியதான இந்த குளத்திலிருந்து திருச்செந்தூர் வரையிலான 13 குளங்களுக்கு தண்ணீர் சென்று விவசாயம் நடக்கிறது.

மழை காலங்களில் அதிக நீர் வரத்து காரணமாக கடம்பாகுளத்தின் உபரி நீர் குரும்பூரை அடுத்த அங்கமங்கலம் அருகில் இருந்து வடிகால் வாய்க்கால் மூலம் ஆத்தூர் மற்றும் ஆறுமுகநேரி வழியாக கடலில் சென்று கலக்கிறது.

சுமார் 10 கிலோமீட்டர் தொலைவிலான இந்த வாய்க்காலில் ஆத்தூர் குளத்தின் உபரி நீரும், வயல் பகுதிகளின் உபரி நீரும் கலந்து செல்கிறது.ஆண்டுதோறும் மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் வயல் பகுதிகள் மூழ்கி விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் தண்ணீர்பந்தல் கிராமத்திற்கு அருகில் உள்ள வாய்க்கால் பாலம் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு விடும்.இதனால் அவ்வழியில் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.வடிகால் வாய்க்கால் குறுகலாக இருப்பதே இந்த அவல நிலைக்கு காரணம். ஆறு போல அகலமாக இருக்க வேண்டிய இந்த வாய்க்காலின் ஒரு பகுதி வயல்களாலும், மற்றொரு பகுதி உப்பளங்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.இதற்கு நிரந்தர தீர்வுகாணப்பட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் தமிழக அரசின் நீர்ப்பாசன துறை சார்பில் கடம்பா குளத்திற்கான நீர்வரத்து கால்வாய், உபரிநீர் செல்லும் வாய்க்கால் ஆகியவற்றை சீரமைத்தல், குளத்தின் கரை மற்றும் மடைகளை பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.34 கோடி ஒதுக்கப்பட்டது.இந்தத் திட்ட பணியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து கடம்பாகுளத்தின் வடிகால் வாய்க்காலின் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.ஆங்கிலேயர் காலத்து வரைபடத்தின் அடிப்படையில் வடிகாலுக்குரிய இடம் இரு பக்கமும் முழுமையாக அகற்றப்படுகிறது.இதனால் வயல்களும், உப்பளங்களும் காலியாகி விட்டன. இதனிடையே இப்பகுதி உப்பு உற்பத்தியாளர்களின் நூற்றுக்கணக்கான உப்பளங்கள் அடியோடு பாதிக்கப்பட்டுவிடும் என்று கூறப்படுகிறது.

எனவே உப்பளங்களை அகற்றும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என்று உப்பு உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக சங்கத்தின் நிர்வாகிகளான ராமச்சந்திரன், பூபால் மகேஷ், கணேசமூர்த்தி, வெங்கடேசன், சரவணன் உள்ளிட்ட குழுவினர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் நேரில் சென்று கோரிக்கை மனு வழங்கினர்.

இது குறித்து அதிகாரிகளிடம் பேசி பரிசீலனை செய்யப்படும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.அப்போது அவருடன் ஆறுமுகநேரி பேரூராட்சி துணைத்தலைவர் கல்யாணசுந்தரம், நகர தி.மு.க செயலாளர் நவநீத பாண்டியன் ஆகியோர் இருந்தனர்.

Tags:    

Similar News