ரேஷன் அரிசியை வீட்டில் பதுக்கி வைத்தவர் கைது
- 50 கிலோ எடை கொண்ட 2 மூட்டைகளும், 10 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டையும் என மொத்தம் 110 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது.
- அரிசியை பதுக்கி வைத்தவர் பெயர் சரவணன் (வயது 59), காவேரிப்பட்டணம் அருகே உள்ள குண்டலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே குண்டலப்பட்டி பக்கமுள்ள மாட்டுவாயன்கொட்டாய் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசியை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்து அங்கு சென்றனர். அங்கு 50 கிலோ எடை கொண்ட 2 மூட்டைகளும், 10 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டையும் என மொத்தம் 110 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அந்த அரிசியை பதுக்கி வைத்தவர் பெயர் சரவணன் (வயது 59), காவேரிப்பட்டணம் அருகே உள்ள குண்டலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்தது.
அவர் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை பெற்று, வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.