சத்திரக்குடியில் நடந்த கூட்டத்தில் மது இல்லா புதிய தமிழகம் என்ற புத்தகத்தை டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டார்.
டாஸ்மாக் கடைகள் முன்பு மது பாட்டில்கள் உடைக்கும் போராட்டம்
- டாஸ்மாக் கடைகள் முன்பு மது பாட்டில்கள் உடைக்கும் போராட்டம் நடத்தப்படும்.
- மது இல்லா புதிய தமிழகம் என்ற புத்தகத்தை டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டார்.
கீழக்கரை
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ராமநாத புரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் தற்போது மது குடிப்போரின் பழக்கம் 60 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஒரு காலத்தில் பெரியவர்கள், முதியவர்கள் மட்டும் மது அருந்தி வந்த நிலை மாறி, தற்போது இளைஞர்கள், மாணவர்கள் என வயது பாரபட்சமின்றி மது குடிக்க தொடங்கி விட்டனர். டாஸ்மாக்கில் மது கொள்முதல், விற்பனை ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது.
டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம்.
100 பொதுக்கூட்டங்கள் நடத்தி மது ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். அதன் பின்பும் மது விலக்கு கொண்டு வரவில்லை வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதி டாஸ்மாக் கடை முன்பு மது பாட்டில்கள் உடைக்கும் போராட்டம் நடத்துவோம்.
தி.மு.க. அரசு குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியை அறிவித்தது. ஆனால் தற்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பெயர் உரிமை தொகை அல்ல. உதவி தொகை என கூறலாம்.
பெண்கள் வாக்குகளை பெற நகைக்கடன் தள்ளுபடி, மாதம் 1000 உரிமை தொகை உள்ளிட்ட பொய்யான வாக்குறுதிகளை தி.மு.க. அளித்துள்ளது. இதற்கு பொதுமக்கள் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தக்க பதிலளிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட செயலாளர் சிவ. பாலுச்சாமி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
முன்னதாக சத்திரக்குடியில் நடந்த கூட்டத்தில் மது இல்லா புதிய தமிழகம் என்ற புத்தகத்தை டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டார்.