உள்ளூர் செய்திகள்

கள்ள மார்க்கெட்டில் மதுபாட்டில்கள் விற்பனை

Published On 2023-01-19 14:03 IST   |   Update On 2023-01-19 14:03:00 IST
  • கீழக்கரையில் கள்ள மார்க்கெட்டில் மதுபாட்டில்கள் விற்பனை நடக்கிறது.
  • ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீழக்கரை

கீழக்கரையில் அரசு மதுபான கடைகள் இல்லாததால் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருப்புல்லாணி பகுதிகளில் செயல்படும் மதுபான கடைகளில் இருந்து வாகனங்களில் மதுபாட்டில்கள் கொண்டு வரப்பட்டு கீழக்கரையில் மது விற்பனை களைகட்டி நடந்து வருகிறது.

கீழக்கரையில் புதிய பஸ் நிலையம், வள்ளல் சீதக்காதி சாலை, ஏர்வாடி முக்கு ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெட்டிக்கடை போல் அமைத்து கள்ள மார்க்கெட்டில் மது பாட்டில் விற்பனை நடக்கிறது.

மேலும் பெண்கள் நடந்து செல்லும் பல்வேறு பாதைகளில் மது பிரியர்கள் சர்வ சாதாரணமாக அமர்ந்து திறந்த வெளியில் மது அருந்தி வருகின்றனர். இதனால் கீழக்கரையில் ரோந்து பணியில் போலீசார் உள்ளனரா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இந்த பகுதியில் உள்ள தனிப்பிரிவு போலீசார் உறக்கத்தில் உள்ளனர். மேலும் சட்ட விரோதமான செயல்கள் குறித்து தலைமை இடத்துக்கு எந்தவித தகவலும் தெரிவிக்காமல் மறைத்து வருவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர். மது பிரியர்களால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வந்தும் கோர்ட், வழக்கு, விசாரணைக்கு பயந்து எவ்வித புகாரும் தெரிவிக்காமல் சென்று விடுகின்றனர்.

இதுசட்ட விரோத மான மதுபான விற்பனையாளர்களுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது. ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News