உள்ளூர் செய்திகள்

'ஹைவே' போக்குவரத்து போலீசாரின் ரோந்து பணியில் தொய்வு

Published On 2023-02-20 13:38 IST   |   Update On 2023-02-20 13:38:00 IST
  • ராமநாதபுரம் மாவட்டத்தில் ‘ஹைவே’ போக்குவரத்து போலீசாரின் ரோந்து பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
  • அதிகரிக்கும் விபத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், தேவிபட்டினம், ஏர்வாடி, உத்தரகோசமங்கை, திருப்புல்லாணி, சேதுக்கரை ஆகிய இடங்களில் புண்ணிய தலங்கள் இருப்பதால் வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

நெடுஞ்சாலையில் நடக்கும் விபத்துக்களை தவிர்ப்பதற்காக தொடங்கப்பட்ட 'ஹைவே' போலீசார் தங்கள் பணியை முறையாக மேற்கொள்ளாததால் வாகனங்களின் விதி மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த வழியாக செல்லும் லாரிகள் அசுர வேகத்தில் செல்வதால் ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். இந்த வழித்தடத்தில் குடி போதையில் வாகனங்களை ஓட்டிச் செல்லும் நபர் களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

சோதனை சாவடியில் போலீசார் இல்லாதால் விபத்துக்களை ஏற்படுத்தும் டிரைவர்கள் எளிதில் தப்பிச் சென்று விடுகின்றனர். இரவில் நடந்து செல்பவர்கள் மீது வாகனம் மோதுவதும், அதிவேகத்தில் செல்லும் வாகனங்கள் தலை கீழாக கவிழ்வதும், அசுர வேகத்தில் வாகனங்கள் செல்வதும் இந்த சாலையில் தொடர்கதையாக நடந்து வருகிறது.

நெடுஞ்சாலையில் நடக்கும் விபத்துக்களை தவிர்ப்பதற்காக தொடங்கப்பட்ட ரோந்து போலீசார் தலை காட்டுவதே கிடையாது. இதனால் இந்த பகுதியில் உயிர்பலி எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

நேற்று நதிப்பாலம் அருகே நடந்த நெஞ்சை உருக்கும் சம்பவத்தில் அரசு மருத்துவமனையில் இருந்து பிறந்த குழந்தையுடன் வீடு திரும்பிய தம்பதி உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராமநாதபுரம்- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் நதிப்பாலம் அருகே சிக்னல் விளக்கு அமைக்க கோரி பல்வேறு தரப்பினரும், பொதுமக்களும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த பகுதியில் விபத்து என்பது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது.

கண் துடைப்பு நடவடிக்கையாக மாதத்திற்கு ஒரு முறை போக்குவரத்து போலீசார் ஆய்வு என்ற பெயரில் இரண்டொரு வழக்குப்பதிவு செய்து 'சாதனை' செய்கின்றனர். இதை தடுக்க ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News