உள்ளூர் செய்திகள்

பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 26 பேருக்கு ரூ.16.50 லட்சம் வங்கிக்கடனை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார்.

பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக்கடன்

Published On 2022-09-30 07:32 GMT   |   Update On 2022-09-30 07:32 GMT
  • பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 26 பேருக்கு ரூ.16.50 லட்சம் வங்கிக்கடனை கலெக்டர் வழங்கினார்.
  • இத்திட்டத்தின் மூலம் பயிற்சியுடன் வங்கி கடன் உதவிகள் பெற்று சுயதொழில் துவங்கி, பொருளாதார முன்னேற்றத்துடன் சிறந்து விளங்க வேண்டும்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இந்தியன் ஒவர்சீஸ் வங்கி மற்றும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து பெண்களுக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியுடன் வங்கிக்கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது.

அப்போது கலெக்டர் பேசியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கும், சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கும் சுய தொழில் தொடங்கி பயன்பெறும் வகையில் பயிற்சியுடன் கூடிய வங்கி கடனுதவிகளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து வழங்கி வருகின்றன. அதனடிப்படையில் தற்போது மகளிர் குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு பனைசார்ந்த பொருட்கள் தயாரிப்பதற்கு ஒரு வார காலம் பயிற்சி வழங்கி சுய தொழில் தொடங்க 26 பேருக்கு ரூ.16.50 லட்சம் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் அவர்கள் பனைசார்ந்த பொருட்களை தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் ஒவ்வொருவரின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும். ராமநாதபுரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை சுற்றுலா பகுதிகள் அதிகமுள்ள இடம் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்வார்கள்.

அவர்களின் விருப்பத்திற்கேற்ப பொருட்கள் தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் சுற்றுலா பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற முடிவதுடன் உற்பத்தியும் அதிகரிக்கும். தற்பொழுது இந்த மகளிர் குழுவினர் பனை சார்ந்த பொருட்கள் தயாரிப்பதை கையாளப்பட்டுள்ளார்கள். இதை இவர்கள் நன்கு செயல்படுத்தினால் அதிக அளவில் சுற்றுலா பயணிகளிடம் வரவேற்பை பெற முடியும்.

அது மட்டுமின்றி ஒவ்வொருவரின் பொருளாதார முன்னேற்றம் பெறவும் மற்றும் வங்கிகளில் பெறப்பட்ட கடன் எளிதாக திருப்பி செலுத்துவதன் மூலமும் அவ்வப்போது கூடுதலாக வங்கியில் கடனுதவிகள் பெற்று பயன்பெறலாம். எனவே சிறப்பாக செயல்பட்டு மற்ற குழுக்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்திட வேண்டும்.

இதே போல் ஆர்வமுள்ள படித்த ஆண்கள், பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயிற்சியுடன் வங்கி கடன் உதவிகள் பெற்று சுயதொழில் துவங்கி, பொருளாதார முன்னேற்றத்துடன் சிறந்து விளங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், தமிழ்நாடு கிராம வங்கி மேலாளர் ராதிகா, ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் கலைச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News