மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பலி
- கமுதி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பலியானார்.
- இந்த விபத்து குறித்து கமுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கமுதி
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பூதத்தான் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது24). இவர் வலையபூக்குளத்தை சேர்ந்த நண்பர் அருணுடன்(25) மோட்டார் சைக்கிளில் வெளியூர் சென்றார்.
நேற்று மாலை கமுதி நோக்கி வந்து கொண்டிருந்தார். பாம்புல்நாயக்கன்பட்டி அருகே வந்தபோது முன்னே சென்ற ஆட்டோவை முந்த முயன்றனர். எதிர்பாராதவிதமாக ஆட்டோவில் மோதி கீழே விழுந்தனர்.
இதில் முருகேசன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.அவரது உடல் கமுதி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
உடன் சென்ற அருண், ஆட்டோவில் சென்ற கண்ணார்பட்டியை சேர்ந்த சூர்யகலா(42) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இருவரும் கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இந்த விபத்து குறித்து கமுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.