தொழிலாளி கொலை வழக்கில் ஒருவர் கைது
- தொழிலாளி கொலை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்
- மற்றொருவருக்கு போலீஸ் வலை
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வடக்கு அம்மாபட்டினம் பகுதியை சேர்ந்தவர் அப்துல்ரசாக் (வயது50) இவர் தேநீர் கடையில் பலகாரம் போடும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர், தீபாவளி அன்று மணமேல்குடி அருகே கண்னிவயலில் உள்ள கண்மாய் பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து மணல்மேல்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், அப்துல்ரசாக் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ரஹ்மத்துல்லா (41) என்பவரிடம் ரூ 8 ஆயிரம் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இருந்த போதிலும், ரஹ்மத்துல்லா மற்றும் அவரது சகோதரர் இப்ராம்ஷா ஆகிய இருவரும் சேர்ந்து அப்துல்ரசாக்கை மது அருந்த கூத்தாடிவயல் கண்மாய்க்கு அழைத்துச் சென்று மூன்று பேரும் மது அருந்தியுள்ளனர்.
அப்போது கொடுத்தக்கடனை திரும்பத்தரமாட்டாயா எனக் கூறி அண்ணன், தம்பி இருவரும் சேர்ந்து, அப்துல்ரசாக் கழுத்தை ப்ளேடால் அறுத்து அருகே இருந்த கண்மாயில் மூழ்கடித்துள்ளனர் என தெரியவந்தது.
இதனை தொடர்ந்து ரஹ்மத்துல்லாவை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள இப்ராம்ஷாவை தேடி வருகின்றனர். கொடுத்தக் கடனை திரும்பிக் கேட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.