சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.
கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகிக்கப்படுவதாக கூறி டவுனில் பொதுமக்கள் சாலை மறியல்
- 23-வது வார்டு பகுதி மக்கள் காட்சி மண்டபம் பகுதியில் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டுடர்வகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு- வாக்குவாதம் ஏற்பட்டது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட 23-வது வார்டு பகுதியில் கடந்த 3 மாதத்திற்கு மேலாக கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.
சாலை மறியல்
மேலும் பொதுமக்கள் குடிநீரை பயன்படுத்த முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுவதுடன் கலங்கலான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் அதனை பயன்படுத்தும் மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 23-வது வார்டு பகுதி மக்கள் கலங்களான குடிநீருடன் இன்று நெல்லை - தென்காசி நெடுஞ்சாலையில் காட்சி மண்டபம் பகுதியில் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எனினும் அவர்கள் மறியல் போராட்டத்தில் தொடர்ந்தனர். இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டுடர்வகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு- வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, 3 நாட்களுக்குள் சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக நெல்லை- தென்காசி சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.