உள்ளூர் செய்திகள்

சொத்து வரி, மின் கட்டண உயர்வு: மக்களின் மீது பெரும் சுமையை தி.மு.க. அரசு சுமத்தி உள்ளது- கிருஷ்ணகிரியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published On 2022-08-10 14:32 IST   |   Update On 2022-08-10 14:32:00 IST
  • அ.தி.மு.க.வை யாராலும் வீழ்த்த முடியாது. துரோகம் செய்த சதியால் தி.மு.க. ஆட்சிக்கு வந்துள்ளது.
  • தி.மு.க. ஆட்சியில் பழி வாங்கும் நடவடிக்கையாக முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள், அ.தி.மு.க.வினர்மீது வழக்குகள் பதிவு செய்கிறார்கள்.

கிருஷ்ணகிரி,

சேலத்தில் இருந்து சென்னைக்கு சென்ற அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு, கிருஷ்ணகிரியில் அவதானப்பட்டி சிறுவர் பூங்கா அருகில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

அ.தி.மு.க.வை யாராலும் வீழ்த்த முடியாது. துரோகம் செய்த சதியால் தி.மு.க. ஆட்சிக்கு வந்துள்ளது. இன்று மக்கள் விழித்துக் கொண்டார்கள். இனி வரக்கூடிய தேர்தலில் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும்.

தி.மு.க.வின் 14 மாத ஆட்சிக் காலத்தில் இந்த மாவட்டத்திற்கு என்ன செய்துள்ளார்கள். எல்லா துறைகளிலும் 20 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளார்கள். அதுதான் அவர்களின் 14 மாத கால சாதனை. எந்த நன்மையும் இந்த ஆட்சியால் இல்லை.

கொரோனாவால் வேலை வாய்ப்பை இழந்து, பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்கு பேரிடியாக வீட்டு வரி, சொத்து வரி, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை தி.மு.க. அரசு கொண்டு வந்தார்கள். மக்களின் மீது பெரும் சுமையை தி.மு.க. அரசு சுமத்தி உள்ளனர்.

தி.மு.க. ஆட்சியில் பழி வாங்கும் நடவடிக்கையாக முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள், அ.தி.மு.க.வினர்மீது வழக்குகள் பதிவு செய்கிறார்கள். இதை செய்வதால் அ.தி.மு.க.வை முடக்கி விட முடியுமா?. எங்களை நேரடியாக சந்திக்க தைரியம் இல்லாமல் எங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களின் தொழில்களை முடக்க பார்க்கிறார்கள்.

உங்களுக்கு தைரியம், திராணி இருந்தால் நேரடியாக அரசியல் ரீதியாக சந்தியுங்கள். நாங்கள் சந்திக்க தயார். குறுக்கு வழியில் அ.தி.மு.க.வை அழிக்க நினைக்காதீர்கள். அது எந்த சக்தியாலும் முடியாது. வரும் தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றியை பெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர்கள் அசோக்குமார் எம்.எல்.ஏ. (கிருஷ்ணகிரி கிழக்கு), பாலகிருஷ்ணரெட்டி (கிருஷ்ணகிரி மேற்கு), மற்றும் ஓசூர் மாநகர தெற்கு பகுதி செயலாளர் பி.ஆர்.வாசுதேவன், கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News