உள்ளூர் செய்திகள்

பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலில் சாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி. தேரோட்டத்தை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்ற போது எடுத்த படம்.

பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில் தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Published On 2023-01-21 09:43 GMT   |   Update On 2023-01-21 09:43 GMT
  • பரமத்தி வேலூர் தாலுக்கா, பாண்டமங்கலத்தில் உள்ள அலமேலு மங்கா, கோதாநாயகி சமேத பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவிலில் திருத்தேர் பெருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
  • திருத்தேர் பெருவிழாவிற்கான ஏற்பாடுகளை பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் சாமி கோவில் செயலர் அலுவலர், தக்கார், விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா, பாண்டமங்கலத்தில் உள்ள அலமேலு மங்கா, கோதாநாயகி சமேத பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவிலில் திருத்தேர் பெருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு அங்குரார்ப் பணமும், திருமுளைபாலிகை இடுதலும் நடைபெற்றது. நேற்று நண்பகல் பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாண்டமங்கலம் பேரூராட்சித் தலைவர் டாக்டர் சோமசேகர், துணைத்தலைவர் பெருமாள் என்கிற முருகவேல் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து இரவு அன்ன வாகனத்தில் சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருத்தேர் பெருவிழாவை முன்னிட்டு இன்று முதல் வரும் 27-ந் தேதி வரை தினந்தோறும் காலை பல்லக்கு உற்சவமும், இரவு சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், பெரிய திருவடி கருட சேவை, சேஷ வாகனம், யானை வாகனம், திருக்கல்யாண உற்சவம், புஷ்ப விமான புறப்பாடு மற்றும் குதிரை வாகனங்களில் சாமி முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

வரும் 28-ந் தேதி அதிகாலை சாமி திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 29-ந் தேதி முதல் பிப்ரவரி மாதம் 1-ம் தேதி வரை தொடர்ந்து காலை பல்லக்கு உற்சவம், இரவு வராக புஷ்கரணியில் தீர்த்தவாரி, கெஜலட்சுமி வாகனம், வசந்த உற்சவம், புஷ்ப யாகம் மற்றும் படிச்சட்டத்தில் சுவாமி திருவீதி உலா புறப்பாடும் நடைபெறுகிறது.

திருத்தேர் பெருவிழாவிற்கான ஏற்பாடுகளை பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் சாமி கோவில் செயலர் அலுவலர், தக்கார், விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

Tags:    

Similar News