உள்ளூர் செய்திகள்

காஞ்சி அண்ணா கல்லூரியில் ரூ.3 கோடி வரை பண மோசடி- சந்தேகப்படும் ஊழியரிடம் போலீசார் விசாரணை

Published On 2023-04-25 07:55 GMT   |   Update On 2023-04-25 07:55 GMT
  • நான்கு வருட படிப்பு முடித்த பிறகு பணம் திருப்பி அளிக்கப்படும்.
  • பிப்ரவரி மாதமே மாணவர்களிடம் திருப்பி அளிக்க வேண்டிய தொகை கடந்த மாதம் வரை கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் அடுத்த சென்னை -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பொன்னேரிக்கரை பகுதியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் உறுப்பு கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு என்பவர் உதவியாளராக பணி செய்து வருகிறார். இவர் கல்லூரியின் வரவு-செலவு கணக்கு வழக்குகளை நிர்வகித்து வருவதாக தெரிகிறது.

அரசு நிர்ணயிக்கும் கட்டணம் மட்டுமே இந்த கல்லூரியில் வசூலிக்கப்படும். விடுதியில் தங்கி படிக்கும் மாணவ-மாணவிகளிடம் பெறப்படும் டெபாசிட் பணம் வங்கியில் நிரந்தர வைப்புநிதி கணக்கில் செலுத்தப்படும். நான்கு வருட படிப்பு முடித்த பிறகு பணம் திருப்பி அளிக்கப்படும்.

இந்நிலையில் பிப்ரவரி மாதமே மாணவர்களிடம் திருப்பி அளிக்க வேண்டிய தொகை கடந்த மாதம் வரை கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவ-மாணவிகளிடம் நிர்வாகிகள் விசாரணை நடத்தினர். அப்போது இந்த பணம் மோசடியாக எடுக்கப்பட்டது தெரியவந்தது. கல்லூரிக்கு சொந்தமான 9 வங்கி கணக்குகள் மற்றும் நிரந்தர வைப்பு வங்கி கணக்குகளை ஆய்வு செய்தபோது அவற்றிலும் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்திருப்பது தெரிந்தது.

ரூ.3 கோடி வரை பண மோசடி நடந்திருப்பதாக கூறப்படுகிறது. கல்லூரி முதல்வரின் போலி கையெழுத்து மற்றும் போலி லெட்டர் பேட் மூலம் இந்த பணத்தை எடுத்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து வங்கி கணக்கு விவரங்களை நிர்வகித்து வரும் ஊழியர் பிரபு மீது சந்தேகம் உள்ளதாக கல்லூரி தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News