கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்: கோவையில் த.வெ.க.வினர் 81 பேர் மீது வழக்கு
- போராட்டத்தில் 64 ஆண்கள், 17 பெண்கள் பங்கேற்றனர்.
- அனுமதியில்லாமல் கூடி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை:
தமிழ்நாட்டில் பாலியல் சம்பவங்களை கண்டித்தும், மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும் த.வெ.க தலைவர் விஜய் எழுதிய நோட்டீசை அந்த கட்சியினர் மாணவ, மாணவிகளிடம் வினியோகம் செய்து வருகிறார்கள்.
சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் நோட்டீஸ் வினியோகம் செய்தபோது, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பட்டார்.
இதனை கண்டித்து தமிழக வெற்றிக்கழகத்தினர் நேற்று மாலை கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். மாவட்ட நிர்வாகி சம்பத்குமார் தலைமையில் த.வெ.க கட்சியினர் 80க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 64 ஆண்கள், 17 பெண்கள் பங்கேற்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட த.வெ.க கட்சியினர் 81 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை அங்குள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரையும் விடுவித்தனர்.
இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தமிழக வெற்றிக்கழகத்தின் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சம்பத் குமார் மற்றும் நிர்வாகிகள் உள்பட 81 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அனுமதியில்லாமல் கூடி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தல் என்ற பிரிவின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.