கோவையில் இன்று போலீஸ் பணிக்கு உடல் தகுதி தேர்வு
- தேர்வில் தேர்ச்சி பெற்ற வர்களுக்கான உடல் தகுதி தேர்வு இன்று நடை பெற்றது.
- பி.ஆர்.எஸ் மைதானத்தில் ஆண்களும், நேரு ஸ்டேடியத்தில் பெண்களும் கலந்து கொண்டனர்.
கோவை,
தமிழ்நாடு தேர்வாணை யம் மூலம் 2-ம் நிலை போலீசார், ஜெயில் போலீசார், தீயணைப்பு வீரர்கள் பணிகளுக்கு உடல் தகுதி தேர்வு கோவையில் இன்று காலை நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் 3,552 பணியிடங்களுக்கு 2-ம் நிலை போலீசார், ஜெயில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பணியிடம் நிரப்புவதற்காக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற வர்களுக்கான உடல் தகுதி தேர்வு இன்று நடை பெற்றது.
இதில் பங்கேற்க மேற்கு மண்டலத்தை சேர்ந்த 548 பெண்களுக்கும், 623 ஆண்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இவர்களுக்கு உடல் தகுதி தேர்வு கோவையில் இன்று காலை நடைபெற்றது. பி.ஆர்.எஸ் மைதானத்தில் ஆண்களும், நேரு ஸ்டேடியத்தில் பெண்களும் கலந்து கொண்டனர். இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உயரம் சரிபார்த்தல் நடைபெற்றது.
நேரு ஸ்டேடியத்தில் நடந்த தேர்வுக்கு இன்று 300 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் 185 பெண்கள் இன்று தேர்வில் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் உயரம் சரிபார்த்தல் போன்ற தேர்வுகள் இன்று நடந்தது. பி.ஆர்.எஸ் மைதானத்தில் ஆண்களுக்காக நடத்தப்பட்ட தேர்வில் இன்று 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது தேர்வில் 316 பேர் பங்கேற்றனர். ஆண்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் உயரம் மற்றும் உடல் அளவு அளத்தல், 1500 மீட்டர் உடல் தகுதி ஓட்டம் ஆகியவை நடத்தப்பட்டது.தேர்வுகளை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், டி.ஐ.ஜி விஜயகுமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.