உள்ளூர் செய்திகள்
சாலை விபத்தில் தற்காலிக மின் ஊழியா் பலி
- சாலை விபத்தில் தற்காலிக மின் ஊழியா் உயிரிழந்தாா்
- துக்க நிகழ்ச்சிக்கு சென்று வந்த போது விபத்து
பெரம்பலூா்:
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கை.களத்தூா் காந்தி நகரைச் சோ்ந்த பெரியசாமி மகன் அங்கமுத்து (40). இவா், பெரம்பலூா் மாவட்ட மின் வாரியத்தில் கடந்த 10 ஆண்டுகளாக தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், நேற்று மாலை தனது மாமனாரின் உடலை அவரது சொந்த கிராமத்தில் அடக்கம் செய்துவிட்டு, கை.களத்தூா் பாலம் அருகே நடந்து சென்றுக்கொண்டிருந்தாா். அப்போது, அவ்வழியேச் சென்ற அடையாளம் தெரியாத காா் அங்கமுத்து மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த கை.களத்தூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, அவரது உடலை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விபத்து தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்."